/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயில்வே கேட் திறப்பதில் தாமதம் சிங்கபெருமாள் கோவிலில் நெரிசல்
/
ரயில்வே கேட் திறப்பதில் தாமதம் சிங்கபெருமாள் கோவிலில் நெரிசல்
ரயில்வே கேட் திறப்பதில் தாமதம் சிங்கபெருமாள் கோவிலில் நெரிசல்
ரயில்வே கேட் திறப்பதில் தாமதம் சிங்கபெருமாள் கோவிலில் நெரிசல்
ADDED : செப் 05, 2024 11:58 PM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்த சாலையை திருக்கச்சூர், தெள்ளிமேடு, கொளத்துார், ஆப்பூர் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், அதிக அளவில் சென்று வருகின்றன.
இந்த சாலையில், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை திறப்பதில், காலை மற்றும் மாலை நேரங்களில் தாமதம் ஏற்படுவதால், இந்த பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சிங்கபெருமாள் கோவில் கேட்டை தினமும் கடந்து சென்று வருவது, போக்குவரத்து நெரிசல் காரணமாக பெரும் சவாலாக உள்ளது. செங்கல்பட்டு - தாம்பரம் ரயில் தடத்தில் தினமும், 30க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் 25 தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விரைவு ரயில்களும் சென்று வருகின்றன.
சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட்டில், ரயில்கள் சென்றவுடன் கேட் திறக்கும் சிக்னல் கிடைப்பது இல்லை. 5 - 7 நிமிடங்கள் வரை, சிக்னல் கிடைக்க தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதனால், ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை சென்று வர தாமதம் ஏற்படுகிறது. மேலும், ஜி.எஸ்.டி., சாலை வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
அருகில் திருத்தேரி, பேரமனுார், சாமியார் கேட் பகுதியில் ரயில் சென்ற உடன் கேட் திறக்கப்படுகிறது. இங்கு மட்டும் தாமதம் ஏற்படுகிறது.
ரயில்வே கேட்டில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களிடம் கேட்டால், சிக்னல் கிடைக்கவில்லை என கூறுகின்றனர். எனவே, ரயில்வே உயர் அதிகாரிகள் தலையிட்டு, ரயில்கள் சென்றவுடன் ரயில்வே கேட் திறப்பது போல சிக்னல்களை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.