/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போதிய அளவில் பேருந்துகள் இல்லாததால் கிளாம்பாக்கத்தில் வெளியூர் பயணியர் தவிப்பு
/
போதிய அளவில் பேருந்துகள் இல்லாததால் கிளாம்பாக்கத்தில் வெளியூர் பயணியர் தவிப்பு
போதிய அளவில் பேருந்துகள் இல்லாததால் கிளாம்பாக்கத்தில் வெளியூர் பயணியர் தவிப்பு
போதிய அளவில் பேருந்துகள் இல்லாததால் கிளாம்பாக்கத்தில் வெளியூர் பயணியர் தவிப்பு
ADDED : ஏப் 18, 2024 10:58 PM

கூடுவாஞ்சேரி:லோக்சபா தேர்தல் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, சொந்த ஊருக்கு செல்லும் பயணியர், நேற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். அங்கு, போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பயணியர் பரிதவித்தனர்.
சென்னையில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்தோர், லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க, தங்களின் சொந்த ஊருக்கு செல்ல, நேற்று காலை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திரண்டனர்.
மேலும், தொடர் விடுமுறை காரணமாக, சொந்த ஊருக்கு செல்வதற்காக, குழந்தைகளுடன் அதிக அளவில் பயணியர் குவியத் துவங்கினர்.
ஆன்லைன் முன்பதிவு
தமிழக அரசு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்திருந்தது. அந்த பேருந்துகளின் இருக்கைகள், ஆன்லைன் வாயிலாகவே முன்பதிவு செய்து முழுதும் நிரம்பி விட்டன.
ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யாத பயணியர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், பேருந்து கிடைக்காமல் அல்லாடினர். மதுரை, திருச்சி, விழுப்புரம் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லை.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து, உடனடியாக முன்பதிவு செய்து பேருந்தில் ஏறி செல்வதற்கான வசதியும், நேற்று செய்யப்படவில்லை. இதனால், பயணியர் செய்வதறியாது திகைத்தனர்.
நின்றபடி பயணம்
டிக்கெட் கவுன்டரில் சென்று, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருசிலர், முன்பதிவு செய்து பயணித்த பயணியருடன், நின்று கொண்டும், படிக்கட்டில் அமர்ந்தும் பயணம் செய்தனர்.
இதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள், அதிக கட்டணம் வசூலிக்கத் துவங்கின.
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகள் அனைத்தும், ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு, அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிட்டன.
முன்பதிவு செய்யப்பட்ட பயணியர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்து, தங்களது பேருந்தில் ஏறி பயணம் செய்தனர்.
அனேக பயணியர், முன்பதிவு செய்யாமல் இங்கு வந்து டிக்கெட் கேட்டனர். அவர்களுக்கு இருக்கை வசதி இல்லாததால், டிக்கெட் வழங்க இயலவில்லை.
2 லட்சம் பயணியர்
அவர்களுக்கு சாதாரண பேருந்துகள் இயக்கப்பட்டன. அவற்றில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்து நிலையத்திலிருந்து, நேற்று மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணியர் பயணம் செய்துள்ளனர். அவர்களில், 1 லட்சத்துக்கு 50 ஆயிரம் பேர், ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்து பயணம் செய்த பயணியர்.
இவ்வாறு அவர் கூறினார்.

