/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை பணிக்கு ஏரியில் விதி மீறி மண் எடுப்பு ; செங்கரை சிட்கோ, விவசாயிகளுக்கு பாதிப்பு
/
சாலை பணிக்கு ஏரியில் விதி மீறி மண் எடுப்பு ; செங்கரை சிட்கோ, விவசாயிகளுக்கு பாதிப்பு
சாலை பணிக்கு ஏரியில் விதி மீறி மண் எடுப்பு ; செங்கரை சிட்கோ, விவசாயிகளுக்கு பாதிப்பு
சாலை பணிக்கு ஏரியில் விதி மீறி மண் எடுப்பு ; செங்கரை சிட்கோ, விவசாயிகளுக்கு பாதிப்பு
ADDED : செப் 01, 2024 11:57 PM
சென்னை: இசா ஏரியில் விதியை மீறி மண் எடுப்பதால், செங்கரை சிட்கோ மற்றும் விவசாய நிலங்களுக்கு, பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மாமல்லபுரம் - எண்ணுார் காட்டுப்பள்ளி துறைமுகம் இடையே, சென்னை எல்லைச்சாலை அமைக்கும் பணிக்கு, திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் மற்றும் செங்கரை இசா ஏரிகளில் மண் எடுத்து பயன்படுத்த, 2012ல் அனுமதி வழங்கப்பட்டது.
குறித்த காலத்தில், இப்பணிகள் துவங்கப்படவில்லை. 12 ஆண்டுகள் கழித்து சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக, பாலவாக்கம் ஏரியில் விதியை மீறி அதிக ஆழத்தில் மண் எடுக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகள் நிறுத்தப்பட்டன.
தற்போது, செங்கரை இசா ஏரியில் மண் எடுக்கும் பணிகளை, ஒப்பந்த நிறுவனம் துவங்கி உள்ளது. இங்கு, 145 மீட்டர் நீளம், 115 மீட்டர் அகலம், 0.90 மீட்டர் ஆழத்திற்கு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், 9 மீட்டர் ஆழத்திற்கு மேல் மண் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது.
ஏமாற்றம்
இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்பதால், அருகில் உள்ள செங்கரை சிட்கோவிற்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதற்கு, பல்வேறு விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆரணியாறு வடிநில கோட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் கண்டும், காணாமலும் இருந்து வருகின்றனர்.
மண் எடுப்பதை கண்காணிப்பதாக கூறிவிட்டு, அலுவலகத்தை பூட்டி வெளியே சென்று விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால், புகார் அளிக்க செல்லும் விவசாயிகள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
இது குறித்து, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் திருவள்ளூர் மாவட்ட செயலர் வி.வெங்கடாத்திரி கூறியதாவது:
செங்கரை இசா ஏரி வாயிலாக, 400 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இங்கு, நெல் மட்டுமின்றி மல்லிகை, வெண்டை, கத்தரி, பச்சை மிளகாய், கீரைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
சுற்றுப்பகுதி கால்நடைகளின் நீராதாரமாகவும், இந்த ஏரி உள்ளது. ஏரியில் சில குறிப்பிட்ட இடங்களில், குளம் போல் மண் அள்ளப்படுகிறது.
நடவடிக்கை
இங்கு குறிப்பிட்ட ஆழத்தில், களிமண், செம்மண் உள்ளது. அதன்கீழ், சரளை மணல் உள்ளது. இந்த மண், நீரை வேகமாக உறிஞ்சி பூமிக்கு அனுப்பிவிடும். இதனால், அதிக ஆழத்தில் மண் எடுப்பதால், நிலத்தடி நீர்மட்டம் குறையும் வாய்ப்புள்ளது.
மேலும், மழைநீர் அதிகளவில் தேங்கினாலும், ஏரி விரைந்து வறண்டுவிடும்; இதனால், பாசன தட்டுப்பாடு ஏற்படும். நீர் அருந்த செல்லும் ஆடு, மாடுகள், அதிகளவில் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி, உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
இதுகுறித்து புகார் அளிப்பதற்கு சென்றால் மிரட்டல்கள் வருகிறது. முதல்வர் ஸ்டாலின், மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகியோர், இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
சாலை பணி என்ற பெயரில், செங்கல் சூளைக்கு மண் விற்பனை செய்வதையும் நிறுத்த வேண்டும். மணல் குவாரிகளை போல, அமலாக்கத்துறையினர், இந்த ஏரிகளையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.