/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மண்ணிவாக்கம், வண்டலுாரை ஒருங்கிணைத்து சுகாதார மையம் அமைக்க எதிர்பார்ப்பு
/
மண்ணிவாக்கம், வண்டலுாரை ஒருங்கிணைத்து சுகாதார மையம் அமைக்க எதிர்பார்ப்பு
மண்ணிவாக்கம், வண்டலுாரை ஒருங்கிணைத்து சுகாதார மையம் அமைக்க எதிர்பார்ப்பு
மண்ணிவாக்கம், வண்டலுாரை ஒருங்கிணைத்து சுகாதார மையம் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 14, 2025 11:53 PM
வண்டலுார்,வண்டலுார், மண்ணிவாக்கம் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கும் சேர்த்து, ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்டலுார் ஊராட்சி, 899.90 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது.
15 வார்டுகள் உள்ளன. மண்ணிவாக்கம் ஊராட்சி, 510.43 ஹெக்டேர் பரப்பில் உள்ளது. இதில், 12 வார்டுகள் உள்ளன.
இவ்விரு ஊராட்சிகளிலும் 60,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இவர்கள் காய்ச்சல், சளி உள்ளிட்ட சிறு உடல் உபாதைகளுக்கும், தனியார் மருத்துவமனைகளையே நாட வேண்டியுள்ளது.
எனவே, இரண்டு ஊராட்சிகளுக்கும் சேர்த்து, புதிதாக ஆரம்ப சுகாதார மையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
இவ்விரு ஊராட்சிகளிலும் 60,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். உலக சுகாதார அமைப்பு, 25,000 நபர்கள் வசிக்கும் பகுதிக்கு ஓர் ஆரம்ப சுகாதார மையம் அமைக்க வேண்டும் என வரையறுத்து உள்ளது.
அதன்படி கணக்கிட்டால் வண்டலுார், மண்ணிவாக்கம் பகுதியில் இரு ஆரம்ப சுகாதார மையங்கள் செயல்பட வேண்டும். ஆனால், ஒன்று கூட இல்லை.
இங்கு சுகாதார மையம் இல்லாததால், காய்ச்சல் உள்ளிட்ட சிறு உடல்நல பாதிப்புகளுக்கும், பகுதிவாசிகள் தனியார் மருத்துவமனைக்கு சென்று, அதிக பணம் செலவழித்து, சிகிச்சை பெற வேண்டி உள்ளது.
பிரசவித்த பெண்களுக்கு வழங்கப்படும் 16,000 ரூபாய் நிதி உதவி உள்ளிட்ட நலத் திட்டங்களை, மத்திய அரசு வழங்கி வருகிறது.
அவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமானால், ஆரம்ப சுகாதார மையங்களில் தங்கள் பெயரைப் பதிவு செய்து, தொடர் சிகிச்சை எடுக்க வேண்டும்.
தவிர, அவர்களுக்கான பிரசவமும் அரசு மருத்துவமனையில் நடக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால், இவ்விரு ஊராட்சிகளிலும் ஆரம்ப சுகாதார மையம் இல்லை என்பதால், கூடுவாஞ்சேரியில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார மையத்திற்கே, கர்ப்பிணியர் செல்லும் நிலை உள்ளது.
ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணியர், 7 கி.மீ., துாரம் பேருந்தில் பயணித்து, கூடுவாஞ்சேரி மருத்துவமனைக்குச் சென்று வருவது மிக சிரமமாக உள்ளது. இதனால், கால விரயமும் ஏற்படுகிறது.
தவிர, காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஆரம்ப சுகாதார மையம் இல்லாததால், அப்பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணியரும், நோயாளிகளும் கூடுவாஞ்சேரி மருத்துவமனைக்கே செல்வதால், அங்கு எப்போதும் கூட்டம் முண்டியடிக்கிறது.
எனவே, வண்டலுார் மற்றும் மண்ணிவாக்கம் ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, இப்பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் அமைக்க, மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.