/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விவசாயிகள் 31க்குள் நிலம் விபரம் பதிவு செய்வது... கட்டாயம்!: மத்திய, மாநில அரசுகளின் மானியம் பெற அவசியம்
/
விவசாயிகள் 31க்குள் நிலம் விபரம் பதிவு செய்வது... கட்டாயம்!: மத்திய, மாநில அரசுகளின் மானியம் பெற அவசியம்
விவசாயிகள் 31க்குள் நிலம் விபரம் பதிவு செய்வது... கட்டாயம்!: மத்திய, மாநில அரசுகளின் மானியம் பெற அவசியம்
விவசாயிகள் 31க்குள் நிலம் விபரம் பதிவு செய்வது... கட்டாயம்!: மத்திய, மாநில அரசுகளின் மானியம் பெற அவசியம்
ADDED : மார் 12, 2025 09:25 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் மத்திய, மாநில அரசின் மானியங்கள் பெற, விவசாய நிலங்கள் விவரங்களை பதிவு செய்து, அடையாள எண் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு, வரும் 31ம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென, வேளாண்மைத் துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.
இந்த மாவட்டத்தில், 1.65 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில், நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில், 59,317 விவசாயிகள் உள்ளனர்.
மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில், அதிகமாக நிலங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில், குறைவாக விவசாய நிலங்களில், சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2019ம் ஆண்டில் இருந்து, பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டமான 'பி.எம்.கிசான்' திட்டத்தில் 27,190 விவசாயிகள், ஆண்டுதோறும் 6,000 ரூபாயை மூன்று தவணையாக, 2,000 ரூபாய் என்ற விகிதத்தில், விவசாய இடுபொருள் செலவிற்காக மானியமாக பெற்று வருகின்றனர்.
தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகளுக்கு அடையாள அட்டை எண் வழங்கும் திட்டத்தில், மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி அனைத்து விவசாயிகளுக்கும், ஆதார் எண் போன்ற தனித்துவமான அடையாள எண் வழங்கப்படுகிறது.
இனிவரும் காலங்களில், ஒன்றிய மற்றும் மாநில அரசின் அனைத்து மானியங்களும், இந்த அடையாள எண்ணின் அடிப்படையிலேயே வழங்கப்படும்.
பி.எம்.கிசான் திட்டத்தில் அடுத்த தவணை பெற, விவசாயிகள் இந்த அடையாள எண் பெறுவது அவசியம்.
இந்த அடையாள எண் வழங்கும் முகாம், கடந்த பிப்., மாதம் 10ம் தேதி துவங்கி, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் சக துறை அலுவலர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், 59,317 விவசாயிகளில், 25,401 விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு அடையாள எண் வழங்கப்பட்டு உள்ளது. பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டத்தில், 27,190 விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.
இதில், 10,790 விவசாயிகள் அடையாள எண்ணுக்கு பதிவு செய்துள்ளனர். 16,400 விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ளனர். அவர்களும், அடையாள எண் பதிவு செய்ய முன்வர வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும், இலவசமாக விவசாயிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் அனைவரும் அருகில் உள்ள, பொது சேவை மையங்களை அணுகலாம். இதுவரை அடையாள எண்கள் பெறாத விவசாயிகள், தங்களுடைய ஆதார் நகல், நில ஆவணங்களின் நகல்கள் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றுடன், பதிவு செய்துகொள்ள வேண்டும்.
நில விவரங்களை பதிவு செய்யாமல் உள்ள விவசாயிகள், வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என, ஆட்டோக்கள் வாயிலாக கிராமங்களில் விளம்பரம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் வேளாண்மைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலர்கள், அட்மா திட்ட பணியாளர்கள், பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் மற்றும் சமுதாய வள பணியாளர்கள் ஆகியோர், விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாய்ப்பை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, வேளாண்மைத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நில விவரங்களை பதிவு செய்து, அடையாள எண் பெற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து பொது சேவை மையங்களிலும், இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். வரும், 31ம் தேதிக்குள், அனைத்து விவசாயிகளும் நில விவரங்களை பதிவு செய்து, அடையாள எண் பெற்றுக் கொள்ளலாம்.
- பிரேம்சாந்தி,
வேளாண்மை இணை இயக்குனர்,
செங்கல்பட்டு.