/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றத்தில் மறியல் முயற்சி மாஜி அமைச்சர் ஜெயகுமார் கைது
/
திருக்கழுக்குன்றத்தில் மறியல் முயற்சி மாஜி அமைச்சர் ஜெயகுமார் கைது
திருக்கழுக்குன்றத்தில் மறியல் முயற்சி மாஜி அமைச்சர் ஜெயகுமார் கைது
திருக்கழுக்குன்றத்தில் மறியல் முயற்சி மாஜி அமைச்சர் ஜெயகுமார் கைது
ADDED : பிப் 27, 2025 11:46 PM

திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றம் அ.தி.மு.க., பிரமுகர் கத்தியால் குத்தி தாக்கப்பட்டதை கண்டித்து நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தை முடக்கிய போலீசார், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
திருக்கழுக்குன்றம் அ.தி.மு.க., செயலர் தினேஷ்குமார், 36, கடந்த 25ம் தேதி, தன் வீட்டின் அருகில் மது அருந்தியோரை தட்டிக் கேட்டார்.
அன்றிரவு, 'புல்லட்'டில் வந்த சிலர் இவரை வழிமறித்து, கத்தியால் குத்தி தாக்கினர். தடுக்க முயன்ற உறவினர் மோகன், 33, என்பவரையும் அந்த கும்பல் தாக்கியது.
இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர்.
இதுதொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்கிற வினோத்குமார், 33, அப்பு என்கிற கவுரிசங்கர், 29, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இக்கொடூர தாக்குதலை கண்டித்து, அக்கட்சி அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமையில், நேற்று காலை திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக, கட்சித் தலைமை அறிவித்தது.
அதன்படி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் சந்திப்பு பகுதியில், காலை 11:00 மணிக்கு, ஜெயகுமார் காரில் கடந்தார்.
அங்கு முகாமிட்டிருந்த போலீசார், அவரை மடக்கினர். போலீசாருடன் அவர் வாதிட்டதைத் தொடர்ந்து, அவரை விட்டனர்.
திருக்கழுக்குன்றம், கருங்குழி சாலையில் உள்ள அக்கட்சியின், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலர் ஆறுமுகத்தையும், வீட்டிலிருந்து புறப்பட விடாமல் போலீசார் முடக்கினர்.
பிற பகுதிகளிலிருந்து வந்த கட்சியினரும் தடுக்கப்பட்டனர்.
ஆறுமுகம் வீடு பகுதிக்கு ஜெயக்குமார் சென்ற நிலையில், கட்சியினர் வீட்டின் முன், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு திரண்ட போலீசார், ஜெயகுமார், ஆறுமுகம், கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் என, ஏராளமானோரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்து, மாலை விடுவித்தனர்.