/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நரசிங்க பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் விமரிசை
/
நரசிங்க பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் விமரிசை
நரசிங்க பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் விமரிசை
நரசிங்க பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் விமரிசை
ADDED : மே 15, 2024 10:41 PM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், பிரசித்தி பெற்ற பல்லவர் கால பாடலாத்ரி நரசிங்க பெருமாள் உடனுறை அகோபிலவல்லி தாயார் குடைவரைக் கோவில் உள்ளது.
இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம், வைகாசி பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான பிரம்மோற்சவத்திற்கு, கடந்த 13ம் தேதி காலை கொடி ஏற்றப்பட்டது.
முதல் நாள் புன்யகோடி விமானத்திலும், இரண்டாம் நாள் காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு ஹம்ஸ வாகனத்திலும், உற்சவர் பிரகலாதவரதர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று காலை, கருடசேவை உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டது. காலை 5:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, கோபுர வாசலில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.
பின், நான்கு மாட வீதிகளில் புறப்பாடு, வாண வேடிக்கையுடன் நடத்தப்பட்டது. இதில், சிங்கபெருமாள் கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர் தயார்படுத்தும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மூடப்பட்டிருந்த தேரின் கூரை, பக்கவாட்டு இரும்பு தகடுகள் அகற்றப்பட்டு, தேர் துாய்மைப்படுத்தப்பட்டு, தேரில் உள்ள சிற்பங்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது.
அதோடு, மேலும், நான்கு மாட வீதிகளிலும், தேர் சென்று வர வழித்தடங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.