/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஐ.ஐ.டி., தயாரிப்பான நவீன 'ட்ரோன்' வேளாண் பணிக்காக பரிசோதனை
/
ஐ.ஐ.டி., தயாரிப்பான நவீன 'ட்ரோன்' வேளாண் பணிக்காக பரிசோதனை
ஐ.ஐ.டி., தயாரிப்பான நவீன 'ட்ரோன்' வேளாண் பணிக்காக பரிசோதனை
ஐ.ஐ.டி., தயாரிப்பான நவீன 'ட்ரோன்' வேளாண் பணிக்காக பரிசோதனை
ADDED : ஏப் 16, 2024 06:28 AM

மாமல்லபுரம்: பயிர்களுக்கு உரம் தெளிப்பது உள்ளிட்ட வேளாண்மை பயன்பாட்டிற்காக, ஐ.ஐ.டி., நிறுவனம் உருவாக்கியுள்ள வேளாண்மை பயன்பாட்டு 'ட்ரோன்' மாமல்லபுரத்தில் பறக்கவிடப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
தற்கால அறிவியல் கண்டுபிடிப்பான, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா விமானம், பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ட்ரோன்கள் விவசாய பணிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், பயிரின் வளர்ச்சியை கண்காணிக்கவும், பயிர்களில் பெருகும் பூச்சிகளை கண்டறிந்து அழிக்க, திரவ மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, 'ட்ரோன்' பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம், சமதள நிலம் மட்டுமின்றி, மலைச்சரிவு நிலத்திலும் பயன்படுத்தக் கூடிய நவீன வகை 'ட்ரோன்' கண்டறிந்துள்ளது. மாமல்லபுரம் திறந்தவெளி பகுதியில், அதை பறக்கவிட்டு பரிசோதித்து வருகிறது.
இதுகுறித்து, 'ட்ரோன்' உருவாக்க குழுவின் பொறியாளர் ஜீவா கூறியதாவது:
சென்னை ஐ.ஐ.டி.,யின், 'சோலிஸ்' நிறுவனம் சார்பில், வேளாண்மை பயன்பாட்டிற்காக, 'வீஹா' ட்ரோனை உருவாக்கியுள்ளோம். இதன் எடை 29 கிலோ. ஆறு இறக்கைகள் உள்ளன.
திரவ உரம் நிரப்ப, 11 லிட்டர் கொள்ளளவு கலன், 25.2 ஏ.எச்., லித்தியம் அயன் பேட்டரி ஆகியவை உண்டு. பேட்டரி 30 - 40 நிமிடங்களில் முழுமையாக 'சார்ஜ்' செய்து கொள்ளலாம். 8 லிட்டர் திரவ உரம் நிரப்பி, ஐந்தே நிமிடத்தில், 2 ஏக்கருக்கு மருந்து தெளிக்கலாம்.
தேயிலை போன்ற மலைப்பயிர்கள் பயிரிடும் மலைச்சரிவு தோட்டங்களில், அடுக்கடுக்கு சரிவுகளை உணர்ந்து, அதற்கேற்ப பறக்கும் உயரத்தை நிர்ணயிக்க கூடிய 'டெரெய்ன் பாளோவிங்ஸ்' சென்சார், 8 மீட்டருக்கு முன்பாகவே, இடையூறு தடுப்பு உள்ளதா என்பதை உணர்ந்து, தாமாக நிற்க கூடிய, 'ஆப்ஸ்டக்கல்ஸ் அவார்டன்ஸ்' சென்சார் ஆகியவைகளும் உண்டு.
பயிர் வளர்ச்சி ஆரோக்கியம் அறியக் கூடிய சென்சார் பொருத்தப்பட உள்ளது. 25 மீ., உயரத்தில், 1.5 கி.மீ., தொலைவு வரை பறக்கும்.
எவ்வளவு உயரம், தொலைவு, நேரம் பறக்கிறது உள்ளிட்ட தரவுகளை அறிவதற்காக, 'ட்ரோனை' பறக்கவிட்டு பரிசோதித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

