/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அதிக ஆழத்தில் அணு ஆலை கட்டடங்கள் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாக குற்றச்சாட்டு
/
அதிக ஆழத்தில் அணு ஆலை கட்டடங்கள் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாக குற்றச்சாட்டு
அதிக ஆழத்தில் அணு ஆலை கட்டடங்கள் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாக குற்றச்சாட்டு
அதிக ஆழத்தில் அணு ஆலை கட்டடங்கள் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாக குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 06, 2024 10:26 PM
சதுரங்கப்பட்டினம்:அணுசக்தி தொழில் வளாக பகுதியில் கட்டப்படும் பிரமாண்ட கட்டடங்களால், சதுரங்கப்பட்டினம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கல்பாக்கம் அணுசக்தி தொழில் வளாக பகுதியில், இந்திராகாந்தி அணு அராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம், பாவினி அணுமின் நிறுவனம் உள்ளிட்ட அணுசக்தி நிறுவனங்கள் இயங்குகின்றன.
வளாகத்தின் வடபுற பகுதியாக எடையூர், தென்புற பகுதியாக சதுரங்கப்பட்டினம் என, இரண்டு ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதியாக உள்ளன.
அணுசக்தி தொழிற்கூட கட்டடங்கள், தற்போது அதிகரித்து வரும் நிலையில், சுற்றுப்புற பகுதி நிலத்தடி நீர்மட்டம், படிப்படியாக குறைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
துவக்க காலத்தில், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் பாஸ்ட் பிரீடர் டெஸ்ட் ரியாக்டர் எனப்படும், வேக ஈனுலை பரிசோதனை உலை, சென்னை அணுமின் நிலையத்தின் இரண்டு மின் உற்பத்தி அலகுகள் ஆகியவை மட்டுமே இருந்தன.
அவற்றின் தொழிற்கூடங்களாக, நிலத்தடியில் வெகு ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, கட்டுமானங்கள் உருவாகின.
நாளடைவில், அணுக்கரு மறுசுழற்சி மையம், பாவினி அணுமின் நிலையம் உள்ளிட்ட அணுசக்தி நிறுவனங்களின் கட்டுமானங்களும், நிலத்தடியில் மிகவும் ஆழப் பகுதியிலிருந்தே கட்டுமானங்கள் உருவாக்கி அமைக்கப்பட்டன.
பாஸ்ட் ரியாக்டர் ப்யூல் சைக்கிளிங் பெசிலிட்டிஸ் - எப்.ஆர்.எப்.சி.எப்., தொழிற்கூடத்திற்கான கட்டுமானம், 2018ல் துவக்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
இத்தொழிற்கூடம், சதுரங்கப்பட்டினத்தை ஒட்டியே அமைந்துள்ளது. இதற்காகவும் மிக ஆழத்திலிருந்தே கட்டடம் உருவாக்கப்பட்டது. அணுசக்தி சார்ந்த கட்டடங்கள் என்பதால், நிலநடுக்கத்தை தாங்கக் கூடிய உறுதிக்காக, அவ்வாறு அமைக்கப்படுகின்றன.
அத்தகைய கட்டடங்களுக்கு, வெகு ஆழத்திற்கு தோண்டும் பள்ளத்தால், சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சதுரங்கப்பட்டினம் ஊராட்சித் தலைவர் ரேவதி கூறியதாவது:
எங்கள் ஊராட்சியில், 14,000 பேர் வசிக்கின்றனர். 3,000 வீடுகள் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை, 25 அடி ஆழத்தில் நீர் கிடைத்தது. இப்போது, நிலத்தடி நீர்மட்டம், 40 அடி ஆழத்திற்கும் கீழே இறங்கிவிட்டது.
எப்.ஆர்.எப்.சி.எப்., கட்டடத்திற்காக ஆழமாக தோண்டிய பள்ளத்தால் தான், நீர்மட்டம் குறைந்துவிட்டது.
இரவு முழுதும் மோட்டார் இயக்கி, 'சம்ப்'புகளில் நீர் நிரப்பினால் தான், ஓரளவு குடிநீர் வழங்க முடிகிறது. காலையில் சில பகுதிகள், மாலையில் சில பகுதிகளில் என்று தான், குடிநீர் வழங்குகிறோம்.
நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து, மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.