/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜூன் 4 வரை கட்டுப்பாடு கிராம சபை நடத்த சிக்கல்
/
ஜூன் 4 வரை கட்டுப்பாடு கிராம சபை நடத்த சிக்கல்
ADDED : ஏப் 23, 2024 03:56 AM
மாமல்லபுரம்: தேர்தல் கட்டுப்பாடுகள், ஜூன் மாதம் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சிகளில் மன்ற கூட்டம், ஊராட்சிகளில் மே தின கிராம சபை நடத்துவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக, மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையம், லோக்சபா தேர்தலை பல கட்டங்களாக நடத்துவது குறித்து, கடந்த மார்ச் 16ம் தேதி அறிவித்தது. அன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள், கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.
தமிழகத்தில், கடந்த 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. ஒரு மாத கட்டுப்பாடு காரணமாக, 50,000 ரூபாய்க்கு மேல் ஆவணமின்றி கொண்டு செல்ல இயலாதது, முக்கிய வர்த்தகங்கள் உள்ளிட்ட வகைகளில், பல தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
தமிழக தேர்தல் முடிந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதி வரை, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளில், மாதாந்திர மன்ற கூட்டம், இரண்டு மாதத்திற்கு முன் நடந்தது. தமிழக ஓட்டுப்பதிவு முடிந்துள்ள நிலையில், இம்மாதம், அடுத்த மாதம் என, கூட்டம் நடத்த வாய்ப்பிருந்தது.
தேர்தல் நடத்தை விதிகள் நீட்டிக்கப்பட்டுஉள்ளதால், அதை நடத்துவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மே 1ம் தேதி, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, கிராம ஊராட்சிகளில், கிராமசபை கூட்டம் நடத்துவதும் முக்கிய நடைமுறை. இதுகுறித்தும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது:
தேர்தல் ஆணையம், தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகளை, ஜூன் 4ம் தேதி வரை நீட்டித்துள்ளது. எனவே, மே 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த வாய்ப்பில்லை. அவ்வாறு நடத்துவதாக இருந்தால், அரசின் உயரதிகாரிகள் அறிவிப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.

