/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை புறநகரில் வாகன ஓட்டிகள் அவஸ்தை
/
போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை புறநகரில் வாகன ஓட்டிகள் அவஸ்தை
போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை புறநகரில் வாகன ஓட்டிகள் அவஸ்தை
போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை புறநகரில் வாகன ஓட்டிகள் அவஸ்தை
ADDED : ஆக 21, 2024 11:48 PM

மறைமலை நகர்:தாம்பரம் காவல் ஆணையரகம், 2022 ஜன., மாதம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதில், தாம்பரம், பள்ளிக்கரணை ஆகிய இரண்டு காவல் மாவட்டங்களில், 22 காவல் நிலையங்கள் உள்ளன.
தாம்பரம் காவல் மாவட்டத்தில், கூடுவாஞ்சேரி சரகத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம் உள்ளிட்ட மூன்று போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன.
இங்கு, ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் தனித்தனியாக ஒரு இன்ஸ்பெக்டர், நான்கு சப் - இன்ஸ்பெக்டர், 30 போலீசார் பணியில் உள்ளனர்.
காலியிடங்கள்
இருப்பினும், 30 போலீசாரில் இரண்டு ஓட்டுனர்கள், இரண்டு ரைட்டர்கள், ரைடர் இரண்டு பேர், அயல் பணியில் 7 பேர் என, ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருந்தும் செல்வதால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் பற்றாக்குறை ஏற்படுகிறது.
கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் என, மூன்று போக்குவரத்து காவல் நிலையத்திற்கும் சேர்த்து, ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே பணியில் உள்ளார். மற்ற இரண்டு இடங்கள் காலியாக உள்ளன.
இதனால், வார விடுமுறை, முக்கிய விஷேச தினங்களில், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில், அதிக அளவில் தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், மறைமலை நகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் இருந்து டிரான்ஸ்பர் செய்யப்பட்ட ஏழு காவலர்களுக்கு பதிலாக, மாற்று போலீசார் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், ஆயுதப்படை போலீசார் போக்குவரத்து சரிசெய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
தொடர் விபத்துக்கள்
திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வண்டலுார் இரண்ணியம்மன் கோவில் முதல் -பரனுார் வட்டார போக்குவரத்து அலுவலக கடவுப்பாதை வரை, 22 கி.மீ., துாரம் தாம்பரம் காவல் ஆணையரக கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு, 20க்கும் மேற்பட்ட கடவுப்பாதை மற்றும் சாலை சந்திப்புகள் உள்ளன. இவை அனைத்தும், அதிக அளவில் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் வந்து செல்லும் பரபரப்பான பகுதிகள். இந்த சந்திப்புகளில், ஏதேனும் ஒரு பகுதியில் மட்டுமே போக்குவரத்து போலீசார் பணியில் உள்ளனர்.
குறிப்பாக, சிங்கபெருமாள் கோவில் - ஒரகடம் சாலை சந்திப்பில் தாம்பரம் மார்க்கத்திலும், மறைமலை நகர் சாமியார் கேட் சந்திப்பில் செங்கல்பட்டு மார்க்கத்தில் என, ஏதேனும் ஒரு பக்கத்தில் மட்டுமே போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இந்த சாலையில் போக்குவரத்து சிக்னல்கள் பல, காட்சிப் பொருள்களாகவே உள்ளன. இதனால், இந்த சாலையில் விபத்துகள் நடப்பது தொடர் கதையாக உள்ளது.
விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, இந்த பகுதியில் கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜி.எஸ்.டி., சாலையில், தினமும் சாலையை கடந்து செல்லும்போது, விபத்து ஏற்படுமோ என்ற அச்சவுணர்வுடனேயே இருசக்கர வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. விபத்துகளை தடுக்க, போலீசார் முறையாக அனைத்து சாலை சந்திப்புகளிலும் பணியில் ஈடுபட வேண்டும். பல இடங்களில் போலீசார் இருப்பதில்லை.
- எஸ்.சுகுமார்,
தனியார் நிறுவன ஊழியர்,
சிங்கபெருமாள் கோவில்.
இங்கு பணியில் இருந்த போலீசார், டிரான்ஸ்பரில் இரண்டு மாதங்களுக்கு முன் சென்றனர். அந்த காலி இடங்கள், இன்னும் நிரப்பப்படவில்லை. இதன் காரணமாக, பணியில் உள்ள போலீசார் கூடுதல் பணி செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.
- கூடுவாஞ்சேரி சரக போக்குவரத்து போலீசார்.