/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அடையாறு ஆற்றை இணைக்கும் ஓடை அகலப்படுத்தியதால் பிரமாண்டம்..
/
அடையாறு ஆற்றை இணைக்கும் ஓடை அகலப்படுத்தியதால் பிரமாண்டம்..
அடையாறு ஆற்றை இணைக்கும் ஓடை அகலப்படுத்தியதால் பிரமாண்டம்..
அடையாறு ஆற்றை இணைக்கும் ஓடை அகலப்படுத்தியதால் பிரமாண்டம்..
ADDED : செப் 09, 2024 06:33 AM

பெருங்களத்துார்: மண்ணிவாக்கம் அடுத்த ஆதனுாரில் துவங்கும் அடையாறு ஆறு, வரதராஜபுரம், முடிச்சூர், வெளிவட்ட சாலை, திருநீர்மலை, பொழிச்சலுார் வழியாக சென்று பட்டினம்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது.
பெருங்களத்துார் எல்லையில், அடையாறு ஆற்றில் இருந்து குட்வில் நகர் வரை, அரை கி.மீ., துாரத்திற்கு, 140 முதல் 252 அடி வரை அகலம் உள்ள கால்வாய் செல்கிறது.
பெருங்களத்துாரில் அடங்கிய குமரன் நகர், குட்வில் நகர், மூவேந்தர் நகர், எப்.சி.ஐ., நகர்களில் விவசாயம் நடந்த போது, அடையாறு ஆற்றில் செல்லும் தண்ணீரை, இந்த ஓடைக்கு திருப்பி விடுவர்.
ஓடையில் வரும் தண்ணீரை கொண்டு, இப்பகுதிகளில் விவசாயம் நடந்து வந்தது. நாளடைவில் விவசாய நிலங்கள் குடியிருப்புகளாக மாறியதால், ஓடையை கண்டுகொள்ளவில்லை.
மற்றொரு புறம், மழைக்காலத்தில் பெருங்களத்துாரில் அடங்கிய கண்ணன் அவென்யூ, முடிச்சூர் சாலை, வீரலட்சுமி, பாரதி, மூவேந்தர், குமரன், குட்வில், எப்.சி.ஐ., நகர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன.
மழைக்காலத்தில் இந்த ஓடை வழியாக அடையாறு ஆற்றுக்கு மழைநீர் செல்லும். நாளடைவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கும் பகுதியாக ஓடை மாறியது. மேலும், புதராக மாறி, சிறிய கால்வாயாக சுருங்கியது.
தவிர, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் தேங்குவதை தடுக்கவும், வெள்ள நீர் தடையின்றி ஓடி, அடையாறு ஆற்றில் கலக்கும் வகையிலும், ஓடையை அகலப்படுத்தி, ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, குட்வில் நகர் ஓடையை அகலப்படுத்தி, ஆழப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
அகலப்படுத்தப்பட்ட பின், இந்த ஓடை, அடையாறு ஆறு போல் அகலமாக உள்ளது. இவ்வளவு நாட்களாக, இந்த ஓடையை துார்வாரி பராமரித்திருந்தால், பெருங்களத்துாரில் வெள்ளம் தேங்குவதை தடுத்திருக்கலாம்.
அதேநேரத்தில், அகலப்படுத்தி அப்படியே விட்டு விடாமல், ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலும், ஓடையை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து, கரையின் மேல் நடைபாதை, சிறுவர் பூங்கா அமைத்தால், ஓடையும் பாதுகாக்கப்படும்.
பொதுமக்களுக்கான ஒரு சிறந்த பொழுது போக்கு இடமாகவும் மாறும் என்பதில் ஐயமில்லை. அதேபோல், கழிவுநீர் கலப்பதையும் தடுக்க வேண்டும். இதை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.