/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மணல் குவிந்துள்ள நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் திணறல்
/
மணல் குவிந்துள்ள நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : பிப் 24, 2025 11:26 PM

சிங்கபெருமாள் கோவில்,
சிங்கபெருமாள்கோவில் -- ஸ்ரீ பெரும்புதுார் மாநில நெடுஞ்சாலை 25 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை சுற்றியுள்ள திருக்கச்சூர், தெள்ளிமேடு, ஆப்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரகடம், ஸ்ரீ பெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், தினமும் இந்த சாலையில் சென்று வருகின்றன.
இந்த சாலையை ஒட்டி கொளத்துார் பகுதியில் உள்ள அரசு மேய்க்கால் புறம்போக்கு இடத்தில், தாம்பரம் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை, லாரிகள் வாயிலாக கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகின்றன.
குப்பையை கொட்டி விட்டுச் செல்லும் லாரிகளில், கடைசியாக உள்ள குப்பையை, நெடுஞ்சாலையிலேயே கொட்டி விட்டுச் செல்கின்றனர்.
இதன் காரணமாக, சாலையின் இருபுறமும் குப்பை மற்றும் மணல் திட்டுகள் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. இதனால், வாகனங்கள் செல்லும் போது புழுதி பறந்து, சக வாகன ஓட்டிகள் கண் எரிச்சல், சுவாச பிரச்னை போன்றவற்றால் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும், வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மணல் திட்டுகள் மீது செல்லும் போது, சறுக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
எனவே, இவற்றை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.