/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாதாள சாக்கடை பணியில் அலட்சியம் பம்மல் - அனகாபுத்துாரில் பாதிப்பு
/
பாதாள சாக்கடை பணியில் அலட்சியம் பம்மல் - அனகாபுத்துாரில் பாதிப்பு
பாதாள சாக்கடை பணியில் அலட்சியம் பம்மல் - அனகாபுத்துாரில் பாதிப்பு
பாதாள சாக்கடை பணியில் அலட்சியம் பம்மல் - அனகாபுத்துாரில் பாதிப்பு
ADDED : ஜூலை 09, 2024 06:17 AM

பல்லாவரம்: தாம்பரம் மாநகராட்சி, பம்மல், அனகாபுத்துார் பகுதிகளில், 211 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
இத்திட்டத்தில், குழாய் பதிப்பதற்காக சாலைகளில் தோண்டப்படும் பள்ளத்தை சரியாக மூடாததால், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியுள்ளன.
லேசான மழை பெய்தாலே, சாலைகள் புதைக்குழிகளாக மாறி, வாகனங்கள் சிக்கிக் கொள்வதால் நெரிசல் ஏற்படுகிறது. மக்களும் நடந்து செல்ல முடியாமல் சிரமத்தை சந்திக்கின்றனர்.
இது போன்ற பிரச்னைகளால், வீடுகளில் இருந்து வெளியே வர முடியாத நிலைமையும் ஏற்படுகிறது.
இது குறித்து, பம்மல் - அனகாபுத்துார் மக்கள் கூறியதாவது:
பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டினால், அதை முறையாக மூடுவதில்லை. ஏற்கனவே சாலைகள் குண்டும், குழியுமாகவே உள்ளன.தற்போது, பள்ளத்தை தோண்டி சரியாக மூடாமல்விடுவதால், இன்னும் மோசமாகி விடுகிறது.
திரும்பிய இடமெல்லாம், துாசி படிவதால், பம்மல், அனகாபுத்துார் பகுதிக்குள் செல்வதற்கே அச்சமாக உள்ளது. சங்கர் நகர், 41வது தெருவில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டினர்.
சற்று நேரத்தில் மண் சரிந்து, நீளமாக தோண்டப்பட்ட பள்ளம் பெரிய குழி போல் அகலமாக மாறி, வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வர முடியாத நிலைமை ஏற்பட்டது. இது தெரியாமல், அவ்வழியாக யாராவதுசென்றிருந்தால், பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கும்.
பணி நடக்கும் இடங்களில், மாநகராட்சி அதிகாரிகள் முறையாக கண் காணிப்பதில்லை என்பதையே, இது சுட்டிக் காட்டுகிறது.
அதனால், பணி நடக்கும் இடங்களில் முறையாக கண்காணித்து, குழாய் பதித்தவுடன் பள்ளங்களை முறையாக மூடி, பொதுமக்கள் எவ்வித சிரமமின்றியும், பாதுகாப்பாகவும் சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.
20 நாட்களில் முடிக்க திட்டம்
பல்லாவரம் - குன்றத்துார் சாலையில், பம்மல்,பல்லாவரம் பகுதிகளில், 154 இயந்திர நுழைவாயில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. குழாய்பதிக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. இரவு - பகலாக பணி நடக்கிறது. பல்லாவரம் - குன்றத்துார் சாலையில், அடுத்த 15 முதல் 20 நாட்களுக்குள் பணிகளை முழுதுமாக முடிக்க திட்டமிடப்பட்டுஉள்ளது.
- மாநகராட்சி அதிகாரிகள்