/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீர் உள்வாங்கும் தரைப்பாலத்தில் கான்கிரீட் தடுப்பு அமைக்க எதிர்ப்பு
/
மழைநீர் உள்வாங்கும் தரைப்பாலத்தில் கான்கிரீட் தடுப்பு அமைக்க எதிர்ப்பு
மழைநீர் உள்வாங்கும் தரைப்பாலத்தில் கான்கிரீட் தடுப்பு அமைக்க எதிர்ப்பு
மழைநீர் உள்வாங்கும் தரைப்பாலத்தில் கான்கிரீட் தடுப்பு அமைக்க எதிர்ப்பு
ADDED : ஏப் 24, 2024 01:27 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் - -மேடவாக்கம் சாலையில், பொன்மார்- - மதுரப்பாக்கம் சாலை சந்திப்பில், பழைய தரைப்பாலம் இருந்தது.
மழைக்காலத்தில் அந்த தரைப்பாலத்தின் வழியாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் இருந்ததால், புதிய தரைப்பாலம் மற்றும் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
அதனால், அங்கு நெடுஞ்சாலைத் துறை சார்பில், புதிய தரைப்பாலம் மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், புதிய தரைப்பாலத்தின் மேற்கு பகுதியில், அதாவது மழைநீர் உள்வாங்கும் பகுதியில், சிறிய அளவில் அடுத்தடுத்து இரண்டு இடைவெளி விடப்பட்டு, முக்கிய பகுதியில் கான்கிரீட் தடுப்பு அமைத்து மூடப்பட்டு, அதனுடன் மூடுகால்வாயை இணைக்கும் பணிகள் நடக்கின்றன.
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதால், வடிகால்வாயில் வரும் மழைநீர் மட்டும் தரைப்பாலம் குறுக்கே கடந்து செல்லும் எனவும், மேற்கு பகுதிகளின் நிலப்பரப்பில் வழிந்தோடும் மழைநீர், தரைப்பாலத்தின் வழியாக செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு, அங்கு மழைநீர் தேங்கி நிற்கும் எனவும், அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மழைநீர் உள்வாங்கும் தரைப்பாலத்தின் மேற்கு பகுதியில், கான்கீரிட் தடுப்பை அகற்ற வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
சாலையில் மேற்கு பகுதியில் உள்ள வேங்கடமங்கலம், மதுரப்பாக்கம், மூலச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியேறும் மழைநீர், மேற்கண்ட தரைப்பாலத்தின் வழியாக செல்கிறது.
தற்போது, புதிதாக அமைக்கப்பட்ட தரைப்பாலத்தின் மேற்கு பகுதியில், கான்கிரீட் தடுப்பு அமைத்து மூடப்பட்டுள்ளது.
சிறிய அளவில் இரண்டு இடைவெளி விடப்பட்டுள்ளது. இதனால், புயல், மழைகாலத்தில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். மழைக்காலத்தில் அங்கு மழைநீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, மாவட்ட நிர்வாகம் நேரடி கள ஆய்வு செய்து, தரைப்பாலத்தின் மழைநீர் உள்வாங்கும் பகுதியின் தடுப்பை அகற்ற வேண்டும்.
அதேபோல், மற்ற இடங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய் மற்றும் சிறுபாலம் இணையும் இடத்தில் மட்டும், கால்வாய் குறுகிய அளவாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கும் மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்படும். எனவே இதையும் கள ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

