ADDED : மார் 03, 2025 11:37 PM
சென்னை, தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, அத்தியாவசிய உணவு தானியங்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அவை, கடைகளில் உள்ள பி.ஓ.எஸ்., எனப்படும் விற்பனை முனைய கருவியில், கார்டுதாரரின் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.
பல கடைகளில் எடை குறைவாக வழங்கப்படுவதாக புகார்கள் எழுகின்றன. இதை தடுக்க, ரேஷன் கடைகளில் உள்ள மின்னணு எடை தராசு, 'யு.எஸ்.பி., போர்டல், வைபை, புளூ டூத்' ஆகிய வசதிகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி, விற்பனை முனைய கருவியுடன் இணைக்கப்பட உள்ளது.
இதனால், எவ்வளவு பொருள் வைக்கப்படுகிறதோ, அந்த எடைதான் பதிவாகும். எடை குறைவாக வழங்கி, கூடுதலாக பதிவு செய்ய முடியாது. இத்திட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு - மூன்று கடைகளில் சோதனை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், 'செங்கல்பட்டில் கூட்டுறவு ரேஷன் கடைகளில் மின்னணு எடை தராசுகளில், தொலைதொடர்பு வசதிகள் பொருத்தப்பட்டு உள்ள இறுதி அறிக்கையை, ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்கவும்' என, செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு இணை பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

