/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முருகன் கோவில்களில் பங்குனி உத்திரம் விமரிசை
/
முருகன் கோவில்களில் பங்குனி உத்திரம் விமரிசை
ADDED : மார் 25, 2024 07:17 AM

கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவிலில், நேற்று பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.
கோவில் வளாகத்தில் உள்ள மாமர சுயம்பு சித்தி விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி, மாமரத்தீஸ்வரர், லலிதாம்பிகை அம்மன், தர்மசாஸ்தா ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
தொடர்ந்து, மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை கோவில் வளாகத்தில் உள்ள மாமரத்தீஸ்வரர்- - லலிதாம்பிகை அம்மனுக்கு, திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது.
நந்திவரத்தில் உள்ள நந்தீஸ்வரர் கோவில், ஊரப்பாக்கத்தில் உள்ள ஊரணீஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும், பங்குனி உத்திரம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பெருக்கரணை
சித்தாமூர் அருகே பெருக்கரணை கிராமத்தில் உள்ள மரகத தண்டாயுதபாணி கோவிலில், 58ம் ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா, நேற்று முன்தினம் சித்தி விநாயகருக்கு மஹா அபிஷேகத்துடன் துவங்கியது.
பின், காலை 8:30 மணியளவில், தேரோட்டம் மற்றும் படிவிழா நடந்தது. முக்கிய நிகழ்வான காவடி எடுத்தல் நிகழ்ச்சி, நேற்று காலை 8:30 மணிக்கு துவங்கியது.
இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
சிங்கார வேலன்
சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் சாலையில், சிங்கை சிங்கார வேலன் கோவில் உள்ளது. இங்கு, நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனைகள் நடந்தன.
தொடர்ந்து, வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியர், புஷ்ப அலங்காரத்தில் சிங்கபெருமாள் கோவிலில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோவில் தெரு, நரசிம்மர் கோவில் தெரு, பெரிய விஞ்சியம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு நகர்வலம் சென்றார்.
சிங்கபெருமாள் கோவில், திருத்தேரி, பாரேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்போரூர்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வரத்துவங்கினர்.
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திருமணம், மொட்டை அடித்தல், காது குத்தல் போன்ற நேர்த்திக்கடனை பக்தர்கள் நிறைவேற்றினர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.

