/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலைநகரில் நடை மேம்பால பணி விரைந்து முடிக்க பாதசாரிகள் கோரிக்கை
/
மறைமலைநகரில் நடை மேம்பால பணி விரைந்து முடிக்க பாதசாரிகள் கோரிக்கை
மறைமலைநகரில் நடை மேம்பால பணி விரைந்து முடிக்க பாதசாரிகள் கோரிக்கை
மறைமலைநகரில் நடை மேம்பால பணி விரைந்து முடிக்க பாதசாரிகள் கோரிக்கை
ADDED : பிப் 10, 2025 02:07 AM

மறைமலைநகர்:திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில் பெருங்களத்துார் -- செட்டிப்புண்ணியம் வரை மூன்று கட்டங்களாக, எட்டுவழிச் சாலையாக சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள், கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றன.
தற்போது பணிகள் நிறைவடைந்து உள்ளன.
இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது முதல், சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையை கடக்கும் பாதசாரிகள், அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன.
எனவே, சிங்கபெருமாள் கோவில், காட்டாங்கொளத்துார், பொத்தேரி, வண்டலுார் பேருந்து நிலையம் அருகில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் மறைமலைநகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி பகுதிகளில் நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள், கடந்த சில மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டன.
இதில் பொத்தேரி, காட்டாங்கொளத்துார் பகுதிகளில் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மறைமலைநகர் பகுதியில் பணிகள் துவக்க நிலையிலேயே உள்ளன.
இதன் காரணமாக சாலையை கடக்கும் முதியவர்கள், பெண்கள், பள்ளி குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் தொடர்கிறது.
இதுகுறித்து பாதசாரிகள் கூறியதாவது:
மறைமலைநகர் பகுதியில் உள்ள பள்ளி, தொழிற்சாலைகளுக்கு, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், மறைமலைநகரில் இருந்து தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு சாலையை கடந்து சென்று வருகின்றனர்.
நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருவதால், விபத்து ஏற்படுமோ என்ற அச்ச உணர்வுடன் சாலையை கடந்து ஓடும் நிலை தொடர்கிறது.
எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்லக்கூடிய வகையில், நகரும் படிக்கட்டுகள் அல்லது மின் துாக்கி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

