/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பரிதாப நிலையில் தற்காலிக சாலை தரமாக சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
/
பரிதாப நிலையில் தற்காலிக சாலை தரமாக சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
பரிதாப நிலையில் தற்காலிக சாலை தரமாக சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
பரிதாப நிலையில் தற்காலிக சாலை தரமாக சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 04, 2024 12:34 AM

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் ஊராட்சியில் உள்ள அகரம் கிராமத்தில் இருந்து, கொண்டங்கி சாலை வழியாக, மறைமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, சுற்றுவட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
மழைக்காலத்தில், இச்சாலை அருகே உள்ள கொண்டங்கி ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், அகரம் -- கொண்டங்கி சாலையின் குறுக்கே அமைந்துள்ள குறுகிய தரைப்பாலத்தின் வழியாக செல்லும்.
வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும்போது, சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையின் மேற்பகுதியில் வெள்ளநீர் செல்லும். இதனால், அச்சமயங்களில் வாகன போக்குவரத்து துண்டிக்கப்படும்.
இதனால், 1 கி.மீ., கடக்க வேண்டிய சாலையை, 10 கி.மீ., துாரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, நிரந்தர தீர்வாக, அகரம்- - கொண்டங்கி சாலையில், உயர்மட்ட தரைப்பாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், நபார்டு திட்டத்தில், 2.11 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கவும், 1.74 கோடி ரூபாயில் 1.5 கி.மீ.,க்கு புதிய அணுகு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது, உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்காலிகமண் சாலை அமைக்கப்பட்டு, அதில் வாகன போக்குவரத்து நடக்கிறது.
இந்த தற்காலிக சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், அங்கு மின் விளக்கு இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டிகள், இரவில் பள்ளம் தெரியாமல் நிலை தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
குறிப்பாக, அருகே உள்ள கிராமத்தில் ஏரி மண் எடுத்து செல்லும் லாரிகள் இச்சாலை வழியாக செல்கின்றன. மண் லோடுகளுடன் பல டன் எடையுடன் செல்லும் லாரிகளால் சாலை, மேலும் சேதமடைந்து வருகிறது.
எனவே, தற்காலிக சாலையை தரமாக சீரமைத்து, பள்ளம் இன்றி பராமரிக்க அப்பகுதியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.