ADDED : ஜூலை 19, 2026 04:01 PM
திருக்கழுக்குன்றம்: அறநிலையத்துறை கோவில்களில் அறங்காவலர்களை நியமிப்பதற்கான இணைய விண்ணப்பத்தில், காவல் துறை வழங்கும் சான்றிதழை பதிவேற்ற இயலவில்லை என, விண்ணப்பதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அறங்காவலர்களை நியமிக்க, அத்துறை விண்ணப்பம் பெறுகிறது. அத்துறையின் இணையதளம் அல்லது தபால் மூலம், வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன், காவல் துறையிடம் பெறப்பட்ட சான்றை இணைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சான்றை இணையத்தில் பதிவேற்ற இயலாததாக, விண்ணப்பதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:
அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க, பல சான்றிதழ்கள் பெற்று, இணையத்தில் பதிவேற்றினேன். அதில் போலீஸ் அளித்த சான்றை இணைக்கும் வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது.
அதுபற்றி அந்த துறையில் கூறியபோது, தபாலில் விண்ணப்பத்தை அனுப்புமாறு தெரிவிக்கின்றனர். குறித்த நாளிற்குள் தபால் சென்று சேராவிட்டாலோ, தவறி விட்டாலோ, விண்ணப்பத்தின் நிலை என்னவாகும் என கேள்வியாக உள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.
