/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல் விற்பனை தொகையை விரைந்து வழங்க கோரிக்கை
/
நெல் விற்பனை தொகையை விரைந்து வழங்க கோரிக்கை
ADDED : மே 14, 2024 07:30 PM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில், சிறுங்குன்றம், சிறுதாவூர், பாலுார் உள்ளிட்ட 11 இடங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன.
தற்போது அருங்குன்றம், கொட்டமேடு, வெண்பேடு, ரெட்டிக்குப்பம் ஆகிய நான்கு இடங்களில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் இல்லாததால் மூடப்பட்டது. மற்ற பகுதிகளில், நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
சிறுங்குன்றம் உட்பட அனைத்து பகுதிகளிலும், நெல் கொள்முதல் நிலையத்தில், 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை கமிஷனாக வசூலிக்கப்படுவதாக, விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
அதேபோல், சிறுதாவூர் உள்ளிட்ட பகுதிகளில், மத்திய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் வாயிலாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இவ்வாறு, மத்திய அரசு வாயிலாக நெல் கொள்முதல் செய்யும் நிலையங்களில், விவசாயிகளுக்கு பணம் கிடைக்காமல், 20 முதல் 40 நாட்கள் வரை விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனர். இதனால் பல விவசாயிகள், தனியார் நெல் கொள்முதல் மையத்தை நாடி விற்பனை செய்து விடுகின்றனர்.
மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில், சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

