ADDED : ஜூலை 11, 2026 03:30 PM
கூடுவாஞ்சேரி, ஜூலை 12–
கூடுவாஞ்சேரியில் உருங்குலைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் அமை க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, வார்டு 1க்கு உட்பட்ட, நீலன் பள்ளி தெரு, செல்வ விநாயகர் கோவில் தெரு சந்திப்பில் உள்ள மின் கம்பம் உருக்குலைந்த நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் விபத்து அச்சத்தில் தவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இந்த மின் கம்பம் நடப்பட்டு 30 ஆண்டிற்கு மேல் ஆகிறது. ஐந்து ஆண்டிற்கு முன், மின்கம்பம் உடைந்து கீழே விழாமல் இருக்க, மின்வாரியம் சார்பில், மற்றொரு மின் கம்பத்தை இதோடு இணைத்து தற்காலிக தீர்வு காணப்பட்டது.
ஆனால், கடந்த இரு ஆண்டுகளில், மின் கம்பம் மிக மோசமான நிலையில், உருக்குலைந்து போனது. இதனால், பெரும் விபத்து நிகழும் வாய்ப்புள்ளது.
இது குறித்து, சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகளிடமும், வார்டு கவுன்சிலரிடமும் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த மின் கம்பம் உள்ள தெரு வழியாக, பள்ளி மாணவ – மாணவியர் மற்றும் பொதுமக்கள் 1000க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
எனவே, இந்த மின் கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் நடுவதற்கு மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
