/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேர்தல் நாளுக்கு முன் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
/
தேர்தல் நாளுக்கு முன் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
தேர்தல் நாளுக்கு முன் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
தேர்தல் நாளுக்கு முன் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
ADDED : ஏப் 16, 2024 11:40 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தேர்தல் நாளுக்கு, 72 மணி நேரம் முன்னதாக பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.
இந்த கூட்டத்தில், எஸ்.பி., சாய் பிரணீத், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்நதினி, கலெக்டரின் தேர்தல் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன், தாசில்தார் சிவசங்கரன் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் பங்கேற்றனர்.
அப்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகள்:
ஒவ்வொரு வேட்பாளருக்கும், பயன்பாட்டிற்கு ஒரு வாகனமும், வேட்பாளரின் முதன்மை முகவர் பயன்பாட்டிற்கு ஒரு வாகனமும், வேட்பாளரது பணியாளர் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு ஒரு வாகனம் வீதம் மொத்தம் எட்டு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கோரும்பட்சத்தில், அக்கட்சியினை சேர்ந்த மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் தேர்தல் பணிகளை கவனத்திட கூடுதலாக ஒரு வாகனத்திற்கு அனுமதி வழங்கப்படும்
வாகனத்திற்கான செலவு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் கணக்கில் சேர்க்கப்படும். ஓட்டுப்பதிவு முடியும் வரை, இனம், மதம் மற்றும் மொழி சார்ந்த துாண்டுதல்களில் வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது
கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடக்கூடாது. தனி நபரை பாதிக்கும், இழிவுபடுத்தும் வகையிலான எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது.
48 மணி நேரம்
அனைத்து வேட்பாளர்களும், 48 மணி நேரத்திற்கு முன்பாக தேர்தல் பிரசாரம் செய்வதை நிறுத்த வேண்டும். இன்று, மாலை 5:00 மணிக்கு பின், ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி கிடையாது.
வெளியூலிருந்து பிரசாரத்திற்காக வந்த நபர்கள் மற்றும் தொடர்புடைய லோக்சபா தொகுதியில் ஓட்டுரிமை இல்லாதவர்கள், தொடர்ந்து தொகுதியில் இருக்க அனுமதி இல்லை
ஐந்து நபர்களுக்கு மேலாக, ஒன்றாக செல்ல அனுமதியில்லை. மூன்றாவது முறையாக வேட்பாளர்கள் தங்களது குற்றப்பின்னணி குறித்த விபரங்களை தமிழ், ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தொலைகாட்சியில், இன்றைக்குள் அளித்து, தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
24 மணி நேரம்
அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், தேர்தல் நாள் மற்றும் அதற்கு முந்தைய நாள் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்வதாக இருப்பின், தேர்தல் குழுவினரிடம் 48 மணி நேரத்திற்கு முன்னரே அனுமதி பெற வேண்டும்
உரிமம் பெறப்பட்ட துப்பாக்கிகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை, கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் அனுமதி இல்லை.
தேர்தல் நாள்
வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, தலா ஒரு வாகனத்திற்கு மட்டுமே அனுமதி உண்டு. ஓட்டுனர் உட்பட ஐந்து பேருக்கு மட்டுமே வாகனத்தில் செல்ல அனுமதி
வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தில், வேறு நபர்கள் செல்ல அனுமதியில்லை. தேர்தல் நடத்தும் அலுவலரிடம், வாகனத்திற்காக பெற்ற அனுமதி கடிதத்தை வாகனத்தில் தெளிவாக தெரியும்படி ஒட்டப்பட வேண்டும். இந்த வாகனங்களில், வாக்காளர்களை ஏற்றிச் செல்லக் கூடாது
வாக்காளர்களை இருப்பிடத்திலிருந்து ஓட்டுச்சாவடிகளுக்கு, வேட்பாளரோ அல்லது முகவரோ அழைத்துச் செல்ல வாகன வசதி ஏற்படுத்தக்கூடாது
ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மட்டுமே, ஓட்டுச்சாவடியில் அனுதிக்கப்படுவர். தேர்தல் நாளன்று மாலை 3:00 மணிக்கு, முகவர்களை மாற்றம் செய்ய அனுமதியில்லை.

