/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மரத்திற்கு தீ வைப்பு? கடலுாரில் பரபரப்பு
/
மரத்திற்கு தீ வைப்பு? கடலுாரில் பரபரப்பு
ADDED : மே 31, 2024 02:25 AM

கூவத்துார்,:கூவத்துார் அடுத்த கடலுார், வெங்காட்டுத் தெரு பகுதில், 11 கே.வி., மின்தடம் மற்றும் மின்மாற்றி உள்ளது. பள்ளியை ஒட்டியே மின்மாற்றி உள்ள நிலையில், மாணவர்களுக்கு அபாயம் உள்ளதாகக் கூறி, அதை இடம் மாற்றுமாறு, இப்பகுதியினர் வலியுறுத்தினர்.
இதற்கிடையே, ஆதிதிராவிடர் பகுதிக்கும், அதே மின் மாற்றியிலிருந்து மின்தடம் ஏற்படுத்த, மின் வாரியம் முடிவெடுத்தது.
இதனால் சர்ச்சையும், இரண்டு தரப்பினருக்கும் இடையே தகராறும் ஏற்பட்டது. பின், பேச்சுவார்த்தை நடத்தி, வேறு மின் மாற்றியிலிருந்து, ஆதிதிராவிடர் பகுதிக்கு மின்தடம் அமைக்கஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், வெங்காட்டுத் தெருவில் உள்ள, 200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக கூறப்படும் புளியமரம், கடந்த 28ம் தேதி நள்ளிரவு 12:00 மணிக்கு தீப்பற்றி எரிந்தது.
அதையொட்டிய மின் தடமும் அறுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்பகுதியினர், தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து, வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். மர்மநபர்கள், மரத்திற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளதாக, அப்பகுதியினர் குற்றஞ்சாட்டினர்.