/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பித்தளை கிடைப்பதால் தொழிலாக மாறிய குண்டு சேகரிப்பு
/
பித்தளை கிடைப்பதால் தொழிலாக மாறிய குண்டு சேகரிப்பு
பித்தளை கிடைப்பதால் தொழிலாக மாறிய குண்டு சேகரிப்பு
பித்தளை கிடைப்பதால் தொழிலாக மாறிய குண்டு சேகரிப்பு
ADDED : செப் 03, 2024 05:01 AM

மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் வனப்பகுதியில், ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு, இந்திய ராணுவ வீரர்கள், துணை ராணுவ படை, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு, சுழற்சி முறையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இங்கு, வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும் போது, வனப்பகுதியில் குண்டுகள் சிதறி விழுகின்றன. இதில், சில குண்டுகள் வெடிக்காமலும் இருக்கும்.
இது குறித்து விழிப்புணர்வு இல்லாத அனுமந்தபுரம் கிராம மக்கள், வனப்பகுதியில் விழும் குண்டுகள் மற்றும் சிறிய ரக ராக்கெட் லாஞ்சர்களை, வனப்பகுதியில் மாடு மேய்க்கும் சிலர் சேகரித்து, வீடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
இதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதில் உள்ள பித்தளை பொருட்களை பிரிக்கின்றனர். இவ்வாறு பிரிக்கும் போது, அவை வெடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:
அனுமந்தபுரம் வனப்பகுதியில், ராணுவ பயிற்சி பகுதிகளில் ஆட்கள் நுழையவும், மாடு மேய்க்கவும் தடை உள்ளது.
இந்த பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் விழும் ராக்கெட் லாஞ்சர்களை எடுத்து, அதை உடைத்து, அதில் உள்ள உலோகங்களை பழைய இரும்பு கடைகளில் போடும் வேலையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த குண்டுகளை வீட்டில் வைத்து உடைப்பதால், அதில் வெடிக்காமல் உள்ள குண்டுகள் வெடிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், இது போன்று வெடித்ததில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
அப்போது, வருவாய் துறை அதிகாரிகள், கிராமத்தில் உள்ள பல வீடுகளில் சோதனை நடத்தி, குண்டுகளை அப்போது பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
இச்சம்பவத்திற்கு பின், கிராம மக்கள் ராணுவ பயிற்சி நடைபெறும் பகுதிகளுக்கு செல்லாமல் இருந்து வந்தனர். தற்போது, மீண்டும் குண்டுகளை எடுக்கத் துவங்கி உள்ளனர்.
கடந்த வாரம், அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த கோதண்டன், 50, என்பவர், வீட்டில் வைத்து வெடிகுண்டை உடைக்க முயன்ற போது, அது வெடித்து காயம் ஏற்பட்டது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, ''இந்த வெடிகுண்டுகளை எடுத்து வீட்டில் வைத்திருப்பது, தண்டனைக்குரிய குற்றம். குண்டுகளை வைத்திருப்பது தெரிய வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என கூறினர்.