/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இணைப்பு உரம் வாங்க நிர்பந்தம் கடை உரிமையாளர்கள் அடாவடி
/
இணைப்பு உரம் வாங்க நிர்பந்தம் கடை உரிமையாளர்கள் அடாவடி
இணைப்பு உரம் வாங்க நிர்பந்தம் கடை உரிமையாளர்கள் அடாவடி
இணைப்பு உரம் வாங்க நிர்பந்தம் கடை உரிமையாளர்கள் அடாவடி
ADDED : பிப் 23, 2025 07:51 PM
மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, கிராமப்புறங்களை உள்ளடக்கிய பகுதி.
இப்பகுதியில் கிணறு மற்றும் மின் மோட்டார் பாசனம், ஏரி பாசனம் வாயிலாக நெல், மணிலா, கரும்பு, தர்பூசணி, வெண்டை, கத்தரி, பாகல், புடலங்காய், கோவைக்காய் போன்ற தோட்ட பயிர்களை, விவசாயிகள் அதிகம் பயிரிட்டு வருகின்றனர்.
பருவமழை காலங்களில், நெல் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது.
தற்போது மதுராந்தகம், அச்சிறுபாக்கம் வட்டாரத்தில் நெல் நடவு மற்றும் பயிர்களில் களை எடுத்தல் பணிகள் நடந்து வருகின்றன.
பயிர்களில் உள்ள களையை எடுத்த பின், பயிர்களின் வளர்ச்சிக்காக உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக, பயிர்களுக்கு யூரியா, காம்ப்ளக்ஸ் போன்ற உரங்களை, அதிக அளவில் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
தற்போது, உரக்கடைகளின் உரிமையாளர்கள் யூரியா, காம்ப்ளக்ஸ் போன்ற உரங்களை தனியாக வழங்குவதில்லை.
அந்த உரங்களுடன் இணைப்பாக குருணை போன்ற உரங்களை வாங்கினால் மட்டுமே யூரியா, காம்ப்ளக்ஸ் வழங்கப்படும் என, கடை உரிமையாளர்கள் கறாராக கூறுகின்றனர். இதனால், விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:
மதுராந்தகம் வட்டாரத்தில் ஒரத்தி, எல்.எண்டத்துார், எலப்பாக்கம், ராமாபுரம், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், புழுதிவாக்கம், நெல்வாய் கூட்ரோடு, படாளம் மற்றும் இதர ஊராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் உரக்கடைகளில் யூரியா, காம்ப்ளக்ஸ் போன்ற உரங்களை மட்டும், தனியாக கேட்டால் கொடுப்பதில்லை.
அதனுடன் இணைப்பு உரமாக குருணை அல்லது பூச்சிக்கொல்லி மருந்து வாங்க வேண்டும் என, விவசாயிகளை நிர்பந்திக்கின்றனர்.
விவசாயிகள் பயிருக்கு தேவையான மருந்தை, தேவையான நேரத்தில் மட்டும் தான் வாங்க முடியும்.
தேவையற்ற நேரத்தில், மற்ற மருந்தை வாங்கி என்ன செய்ய முடியும்.
உரங்களுடன் குருணை என்ற இணைப்பு வாங்க வற்புறுத்தும் போது, விவசாயிகள் மறுத்தால், பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கும்படி கட்டாயப்படுத்துகின்றனர்.
விவசாயிகள், கையில் வைத்துள்ள பணத்திற்கு ஏற்ப உரங்களை வாங்க செல்வர். ஆனால், உரக்கடை உரிமையாளர்களின் நிர்பந்தத்தால், இணைப்பு உரங்களை வாங்க வேண்டிய சூழல் உள்ளது.
இதனால், வட்டிக்கு பணம் வாங்கி உரம் வாங்குவதால், பொருளாதார சிக்கல் ஏற்படுகிறது.
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில், அதிகாரிகள் முன்னிலையில் இதுகுறித்து எடுத்துக் கூறியும், எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, விவசாயிகளை வஞ்சிக்கும் உரக்கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.