/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள்கோவில் மேம்பாலம் இந்த மாத இறுதியில் திறக்க திட்டம்
/
சிங்கபெருமாள்கோவில் மேம்பாலம் இந்த மாத இறுதியில் திறக்க திட்டம்
சிங்கபெருமாள்கோவில் மேம்பாலம் இந்த மாத இறுதியில் திறக்க திட்டம்
சிங்கபெருமாள்கோவில் மேம்பாலம் இந்த மாத இறுதியில் திறக்க திட்டம்
ADDED : பிப் 10, 2025 01:59 AM

சிங்கப்பெருமாள் கோவில்:செங்கை புறநகர் பகுதிகளில் வளர்ந்து வரும் முக்கிய நகரம் சிங்கப்பெருமாள் கோவில். சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வந்து செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இங்கு சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றன.
இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, கடந்த தி.மு.க., ஆட்சியில், 2008ம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் அமைக்க பணிகள் துவங்கப்பட்டன.
கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம், ஜி.எஸ்.டி., சாலை எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் காரணமாக, ரவுண்டானா அமைப்பதில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
மீண்டும் 2021ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், மீண்டும் புதிதாக டெண்டர் விடப்பட்டு, 138.27 கோடி மதிப்பில், 2021 நவம்பரில் பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டன.
மேம்பாலம் அமைய உள்ள ஜி.எஸ்.டி., சாலை ஓரம் கட்டடங்கள், மின் கம்பங்கள், பாலாற்று குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்கப்பட்டு, இருபுறமும் மழைநீர் வடிகால்வாய்கள், அணுகு சாலை உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.
தற்போது தாம்பரம் மார்க்கத்தில் பணிகள் முடிவடைந்து, ஒருபுறம் மட்டும் மேம்பாலத்தை திறக்கும் வகையில் வழிகாட்டி பலகைகள், மின் விளக்குகள், இரவில் ஒளிரும் விளக்குகள், எச்சரிக்கை குறியீடுகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த மாதம் செங்கல்பட்டு வரவுள்ள முதல்வர் ஸ்டாலின், இந்த மேம்பாலத்தை திறப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, வாகன ஒட்டிகள் கூறியதாவது:
இந்த ரயில்வே கேட் ஒவ்வொரு முறையும் மூடும் போதும், 20 -- 30 நிமிடங்கள் வரை மூடப்படுவதால், சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. தற்போது மேம்பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக வரும் செய்தி மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

