/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
2 கோவில்களில் கைவரிசை வாலிபர்கள் மூவர் சிக்கினர்
/
2 கோவில்களில் கைவரிசை வாலிபர்கள் மூவர் சிக்கினர்
ADDED : பிப் 22, 2025 12:46 AM
சித்தாமூர், சித்தாமூர் அடுத்த காவாத்துார் பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில், 18ம் தேதி மாலை பூஜைகள் முடிந்து, கோவில் நிர்வாகி புருஷோத்தமன், கோவிலை பூட்டிச் சென்றார்.
மறுநாள் காலை சென்று பார்த்த போது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு குத்து விளக்கு, பித்தளை குடம், பூஜை பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
இதே போல, அருகே உள்ள தேவாத்துார் கிராமத்தில் கந்தபெருமாள் கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருட்டு குறித்து, சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து, இரு கோவில்களிலும் கைவரிசை காட்டிய மர்ம நபர்களைத் தேடி வந்தனர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மாரிபுத்துார் கிராமத்தைச் சேர்ந்த தாமோதர பெருமாள், 24, அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன்குமார், 26, மற்றும் மதுராந்தகம், செங்குந்தர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுதன், 25, ஆகிய மூன்று வாலிபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
சித்தாமூர் போலீசார் மேற்கண்ட மூவரையும் கைது செய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.