/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுார் பூங்காவில் வருகிறது 'டைகர் சபாரி' மத்திய ஆணையம் அனுமதி கிடைத்ததும் துவக்கம்
/
வண்டலுார் பூங்காவில் வருகிறது 'டைகர் சபாரி' மத்திய ஆணையம் அனுமதி கிடைத்ததும் துவக்கம்
வண்டலுார் பூங்காவில் வருகிறது 'டைகர் சபாரி' மத்திய ஆணையம் அனுமதி கிடைத்ததும் துவக்கம்
வண்டலுார் பூங்காவில் வருகிறது 'டைகர் சபாரி' மத்திய ஆணையம் அனுமதி கிடைத்ததும் துவக்கம்
ADDED : ஆக 10, 2024 12:08 AM

தாம்பரம் : வண்டலுார் உயிரியல் பூங்காவில், பார்வையாளர்களை குஷிப்படுத்தும் நோக்கில், டைகர் மற்றும் காட்டுமாடு சபாரி அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான கோப்பு, மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பு பெற்றது, வண்டலுார் உயிரியல் பூங்கா. இது, 1,500 ஏக்கர் பரப்புடையது.
இங்கு, பாலுாட்டிகள், ஊர்வன, பறவைகள், ஊன் உண்ணிகள், விலங்குகள் என, எட்டு வகையாக 2,400 உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மீன் காட்சியகம், பட்டாம்பூச்சி குடில், இரவு நேர விலங்கு உலாவிடம் போன்ற சிறப்பு அம்சங்களும் உள்ளன.
வார நாட்களில் 2,500 முதல் 3,000 வரையிலும், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், 7,500 முதல் 9,000 வரையிலும் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு, அடர்ந்த காட்டுப்பகுதியில் சிங்கங்களை அதன் அருகே சென்று கண்டு ரசிக்கும், 'லயன் சபாரி' பயன்பாட்டில் உள்ளது.
பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள், பாதுகாக்கப்பட்ட வாகனங்களில் லயன் சபாரி இருப்பிடத்திற்கு சென்று, சிங்கங்களை பார்த்து ரசிப்பதை அதிகம் விரும்புகின்றனர்.
கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை தீவிரமாக இருந்த போது, லயன் சபாரி மூடப்பட்டது. அதன் பின், பூங்கா திறக்கப்பட்ட போது, லயன் சபாரி திறக்கப்படவில்லை.
இதனால், பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அவர்களின் விருப்பத்தை ஏற்று, 47 ஏக்கர் பரப்பளவு லயன் சபாரியை புனரமைத்து, 2023, அக்., 2ல் மீண்டும் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
வண்டலுார் பூங்காவில், தற்போது, ஒன்பது சிங்கங்கள் உள்ளன. அதில், ஐந்து சிங்கங்கள், சபாரி எனப்படும் உலாவிட பகுதியில் விடப்பட்டுள்ளன. மூன்று சிங்கங்கள், பார்வைக்கு விடப்பட்டுள்ளன. ஒரு சிங்கம், புனர்வாழ்வு மையத்தில் பராமரிக்கப்படுகிறது.
இங்கு வரும் பார்வையாளர்கள், பாதுகாப்பு வசதியுடைய வாகனங்களில் முதலில் மான் சபாரி பகுதிக்கு அழைத்து செல்லப்படுவர். அங்கு, நுாற்றுக்கணக்கான மான்கள் சுற்றித் திரிவதை பார்த்து ரசிக்கலாம். அது முடிந்ததும், லயன் சபாரிக்கு வாகனம் செல்லும். அங்கு சிங்கங்களையும் அதன் அருகே சென்று பார்த்து ரசிக்கலாம்.
காட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தில் வண்டலுார் பூங்கா சிறந்து விளங்குகிறது.
தற்போது, 27 காட்டு மாடுகள் உள்ளன. அதேபோல், புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து, ஒன்பது வெள்ளைப் புலிகள், 11 வங்கப்புலிகள் உள்ளன.
புலி மற்றும் காட்டு மாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், பார்வையாளர்களின் வசதிக்காக, லயன் சபாரி போன்று, தனியாக டைகர் மற்றும் காட்டுமாடு சபாரியை துவக்க, நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மான் சபாரி அமைக்கப்பட்டுள்ள இடத்தை இரண்டாக பிரித்து, ஒரு பகுதியில் காட்டு மாடு சபாரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், 47 ஏக்கர் பரப்பளவு கொண்ட லயன் சபாரியை இரண்டாக பிரித்து, டைகர் சபாரி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால், பாதுகாக்கப்பட்ட வாகனங்களில் செல்லும் பார்வையாளர்கள் முதலில், மான், காட்டு மாடு சபாரிகளையும், அடுத்ததாக சிங்கம் மற்றும் டைகர் சபாரிகளையும் ரசித்து திரும்பலாம்.
இதன் மூலம், பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும், நிர்வாகத்திற்கும் வருமானம் பெருகும். இத்திட்டம் தொடர்பான அறிக்கை, மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அங்கிருந்து அனுமதி கிடைத்தவுடன், டைகர் மற்றும் காட்டுமாடு சபாரிகளை அமைக்க தேவையான நடவடிக்கைள் எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

