/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாக்காளர் அட்டை வைத்திருந்தும் 3,000 பேரின் ஓட்டுகள் ' வேஸ்ட் '
/
வாக்காளர் அட்டை வைத்திருந்தும் 3,000 பேரின் ஓட்டுகள் ' வேஸ்ட் '
வாக்காளர் அட்டை வைத்திருந்தும் 3,000 பேரின் ஓட்டுகள் ' வேஸ்ட் '
வாக்காளர் அட்டை வைத்திருந்தும் 3,000 பேரின் ஓட்டுகள் ' வேஸ்ட் '
ADDED : ஏப் 23, 2024 04:02 AM

சென்னை : பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 21,000 வீடுகள் உள்ளன. மொத்தம், 160 பிளாக்குகளில், 60,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சமுதாய வளர்ச்சி பிரிவு ஏற்படுத்தி தருகிறது.
இந்த குடியிருப்பு வளாகத்தில் குறைந்தது, 50,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், 18,250 வாக்காளர்களுக்கு மட்டுமே ஓட்டு உள்ளது. இங்கு வசிப்போர், மறுக்குடியமர்வு செய்யப்பட்டபோது, ஏற்கனவே அவர்கள் வசித்த பகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்த பெயர்கள் நீக்கப்பட்டன.
இதுகுறித்து, நம் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது. இதையடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
தேர்தல் முடிந்ததும், விடுபட்டோர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என, வாரிய அதிகாரிகள் கூறினர்.
இது ஒருபுறமிருக்க, ஏப்., 19 ஓட்டுப்பதிவு நாளில், இப்பகுதிக்கான 18 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. இவற்றில் 18,250 பேர் ஓட்டளித்திருக்க வேண்டும். ஆனால், 8,023 பேர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர்.
பல வாக்காளர்களின் அடையாள அட்டையில், வீட்டு எண், பிளாக் எண் சரியாக பதிவு செய்யாததால், எந்த ஓட்டுச்சாவடிக்கு செல்வது என தெரியாமல், ஓட்டளிக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சிலருக்கு, சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், சோழிங்கநல்லுாரில் ஓட்டுச்சாவடி இருந்தது. இதன் காரணமாகவும் பலர் ஓட்டளிக்கவில்லை.
இந்த வகையில், வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், 3,000க்கும் மேற்பட்டோர் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, நலச்சங்கத்தினர் கூறியதாவது:
ஏற்கனவே வசித்த பகுதியில், எந்த பிரச்னை இல்லாமல், பல தேர்தல்களில் ஓட்டளித்தோம். இங்கு வந்த பின் தான், அட்டையில் தவறான தகவல் பதிந்து கொடுத்தனர்.
பிளாக் எண் இருந்தால், வீட்டு எண் இல்லை; வீட்டு எண் இருந்தால், பிளாக் எண் இல்லை. ஓட்டுப்பதிவு நாளில், 8, 10 ஓட்டுச்சாவடிகள் சென்று, அட்டையை காட்டி ஓட்டளிக்க அனுமதிக்கும்படி கேட்டோம்.
ஆனால் தேர்தல் அலுவலர்கள், ஓட்டு இல்லை என திருப்பி அனுப்பினர். முறையாக வழிகாட்டவும் அதிகாரிகள் இல்லை.
எங்கள் ஓட்டு உரிமையை நிறைவேற்ற முடியாத வருத்தம் ஏற்பட்டது. எங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தனித்துறை அமைத்தும், எந்த பயனும் இல்லை.
அடுத்த தேர்தலில், அனைவரும் ஓட்டளிக்கும் வகையில், தேர்தல் கமிஷன் மற்றும் வாரியம் இணைந்து, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

