/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் ஏரியிலிருந்து 1,100 கன அடி நீர் வெளியேற்றம்
/
மதுராந்தகம் ஏரியிலிருந்து 1,100 கன அடி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 1,100 கன அடி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 1,100 கன அடி நீர் வெளியேற்றம்
ADDED : டிச 06, 2025 05:55 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் ஏரியில் நீர் நிரம்பியதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தானியங்கி 'ஷட்டர்'கள் வழியாக, 1100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுராந்தகம் ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 2,500 ஏக்கர். இந்த ஏரி நீர் மூலமாக, 7,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நீராதாரம்
இந்த ஏரியை துார்வாரி ஆழப்படுத்துதல், கொள்ளளவை உயர்த்துதல் மற்றும் கதவணையுடன் கூடிய உபரிநீர் போக்கிகள் அமைக்கும் பணிகள், 2022 முதல் நடந்து வருகின்றன. மொத்தமாக, 160 கோடி ரூபாய் செலவில், மதுராந்தகம் ஏரி சீரமைக்கப்பட்டு வருகிறது.
வந்தவாசி மற்றும் உத்திரமேரூர் ஏரிகள் நிரம்பி வெளியேறும் உபரி நீரும், கிளியாறு மற்றும் நெல்வாய் மடுவு ஆறு ஆகியவற்றிலிருந்து வரும் நீரும், மதுராந்தகம் ஏரிக்கு முக்கிய நீராதாரம்.
கடந்த மூன்று ஆண்டு களாக பணிகள் நடைபெற்று வந்ததால், ஏரிக்கு வந்த நீர் முழுதும் வெளியேற்றப்பட்டது.
தற்போது கலங்கல் அமைத்து, 12 தானியங்கி 'ஷட்டர்'கள் அமைக்கும் பணி முடிந்ததால், நெல்வாய் மடுவு மற்றும் கிளியாற்றில் இருந்து வரும் தண்ணீர், ஏரியில் தேக்கப்பட்டு வந்தது.
தற்போது, வடகிழக்கு பருவமழை, 'டிட்வா' புயல் காரணமாக பெய்த கனமழையால், மதுராந்தகம் ஏரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் ஏரியின் முழு கொள்ளளவான 25 அடியில், 23 அடி நீர் நிரம்பியுள்ளது.
இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக, கீழ் பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியாளரின் அறிவுறுத்தல்படி, நெல்வாய் மடுவு மற்றும் கிளியாற்றின் வழியாக ஏரிக்கு வரும், 1,100 கன அடி தண்ணீர், ஐந்து தானியங்கி 'ஷட்டர்'கள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதிகரிப்பு
கடந்த மூன்று ஆண்டுகளாக மதுராந்தகம் ஏரி பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால், ஏரியில் தண்ணீரின்றி மதுராந்தகம் நகர் மற்றும் கத்திரிச்சேரி, முன்னுாத்திகுப்பம், உழுதமங்கலம், வளர்பிறை, முள்ளி உள்ளிட்ட பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது.
ஆழ்துளை கிணறுகள் வறண்டு காணப்பட்டன. தற்போது ஏரியில் தண்ணீர் தேக்கப்பட்டதால், மதுராந்தகம் நகர் பகுதியில் ஆழ்துளை கிணறுகளில் நீரூற்று அதிகரித்து உள்ளது.
இதனால், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. தற்போது ஏரியிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஏரிக்கு சென்று பார்வையிட முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பின், மதுராந்தகம் ஏரியில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளதால், இந்தாண்டு விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஏரி பாசனம் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் மின் மோட்டார் அமைத்து விவசாய பணிகள் மேற்கொள்ளும் விவசாயிகள், தற்போது நடவு பணிக்கான முதற்கட்ட ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். - கே.குமார், மதுராந்தகம் ஏரி பாசன சங்க தலைவர்.

