/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொள்முதல் நிலையங்களில் 11,000 டன் நெல்... தேக்கம் : அதிகாரிகள் அலட்சியத்தால் வரிப்பணம் வீண்
/
கொள்முதல் நிலையங்களில் 11,000 டன் நெல்... தேக்கம் : அதிகாரிகள் அலட்சியத்தால் வரிப்பணம் வீண்
கொள்முதல் நிலையங்களில் 11,000 டன் நெல்... தேக்கம் : அதிகாரிகள் அலட்சியத்தால் வரிப்பணம் வீண்
கொள்முதல் நிலையங்களில் 11,000 டன் நெல்... தேக்கம் : அதிகாரிகள் அலட்சியத்தால் வரிப்பணம் வீண்
ADDED : அக் 31, 2025 10:17 PM

மறைமலை நகர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், தொடர் மழை காரணமாக, 11,000 டன் நெல் தேக்கமடைந்து உள்ளது. அதிகாரிகள் அலட்சியத்தால். மக்கள் வரிப்பணம் வீணாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், அச்சரப்பாக்கம், சித்தாமூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், லத்துார், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட ஒன்றியங்களில், சொர்ணவாரி பருவத்தில், 35,088 ஏக்கருக்கு நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், சொர்ணவாரி பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
பாதை இல்லை இதன்படி, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய, 70க்கும் மேற்பட்ட இடங்களில், திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக, அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகள் தேங்கி, மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.
இந்த கொள்முதல் நிலையங்களுக்கு லாரிகள் சென்று, மூட்டைகளை ஏற்றி வர முறையான பாதை இல்லை.
இதன் காரணமாக, அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் செய்யப்பட்டுள்ள, 11,000 டன் நெல் மூட்டைகள், மழையில் நனைந்து வீணாகி உள்ளன.
அதில், பல மூட்டை களில் உள்ள நெல் முளைத்துள்ளது. மேலும், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படாத நெல் குவியல்களும், மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.
நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதால், கொள்முதல் நிலையங்களில் நெல்லை குவித்து வைத்துள்ள விவசாயிகள், அவற்றை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் விஷ ஜந்துக்களின் அச்சத்துடன், இருளில் காவலுக்கு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் அடுத்தகட்ட விவசாய பணிகளை மேற்கொள்வதிலும், தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, கொள்முதல் செய்துள்ள நெல்லை, விரைந்து சேமிப்புக் கிடங்கு மற்றும் அரவை ஆலைகளுக்கு அனுப்ப வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு 15 டன் நெல் வைக்க மட்டுமே இடம் உள்ளது.
ஆர்வம் வேடந்தாங்கல் அருகே அன்னடவாக்கம், திருக்கழுக்குன்றம் அருகே என, இரு இடங்களில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளன.
இங்கிருந்து தனியார் அரவை ஆலை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு நெல் அனுப்பி வைக்கப் படுகிறது. செங்கை மாவட்டத்தில், ஆண்டுக்கு 2 லட்சம் டன் நெல் அறுவடை செய்யப்படும் நிலையில், போதிய சேமிப்பு கிடங்குகள் இல்லை.
குறிப்பாக, அரசு நெல்லுக்கான ஆதார விலையை அதிகரித்து உள்ளத்தால் விவசாயிகள் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை தவிர்த்து, நெல் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆ னால், அதற்கு தகுந்த சேமிப்பு கிடங்குகள் மாவட்டத்தில் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் 1 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

