/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
88 போக்சோ உட்பட 149 வழக்குகள் செங்கையிலிருந்து காஞ்சிக்கு மாற்றம்
/
88 போக்சோ உட்பட 149 வழக்குகள் செங்கையிலிருந்து காஞ்சிக்கு மாற்றம்
88 போக்சோ உட்பட 149 வழக்குகள் செங்கையிலிருந்து காஞ்சிக்கு மாற்றம்
88 போக்சோ உட்பட 149 வழக்குகள் செங்கையிலிருந்து காஞ்சிக்கு மாற்றம்
ADDED : ஏப் 10, 2025 08:08 PM
செங்கல்பட்டு:காஞ்சிபுரத்திற்கு புதிய 'போக்சோ' நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக, சட்டசபையில் அறிவிப்பு வெளியான நிலையில், செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் இருந்து, காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு 88 வழக்குகள், முதல் தகவல் அறிக்கை 61 என, 149 வழக்குகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு, 2019 நவ., 29ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் துவக்கப்பட்டது.
ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் அனைத்தும், செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்ற கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தன.
இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்மை மாவட்ட நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம் அமைக்க வேண்டுமென தமிழக அரசு மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்திடம், காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, இந்நீதிமன்றங்களை திறக்க, அரசு மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டன.
அதன் பின், காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம் ஆகியவை, கடந்தாண்டு, மார்ச் மாதம் 3ம் தேதி காஞ்சிபுரத்தில் திறக்கப்பட்டன.
இருந்தும், காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து காவல் நிலையங்கள், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் குன்றத்துார் காவல் நிலைய போக்சோ வழக்குகள், செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.
இந்த நீதிமன்றத்திற்கு வந்து செல்வதற்கு, வழக்காடிகளுக்கு பொருள் விரயம், காலவிரயம் ஏற்பட்டது.
இதுமட்டுமின்றி, போக்சோ வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை அழைத்து வரும் போது, பெண் போலீசார் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள போக்சோ வழக்குகளை, காஞ்சிபுரத்தில் நடத்த புதிய போக்சோ நீதிமன்றம் திறக்க வேண்டும் என, அரசு மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு, வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் உள்ள காஞ்சிபுரம் போக்சோ வழக்குகளை, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவையடுத்து, செங்கல்பட்டில் உள்ள வழக்குகள் கடந்த 4ம் தேதி, காஞ்சிபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன. இதில், வழக்கு விசாரணையில் உள்ள, 88 வழக்குகளும், முதல் தகவல் அறிக்கை எனும் எப்.ஐ.ஆர்., நிலையிலுள்ள 61 என, மொத்தம் 149 வழக்குகள், காஞ்சிபுரம் முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன. இந்நீதிமன்றத்தில் தற்போது, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், சட்டசபை கூட்டத்தொடரில், 'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க, காஞ்சிபுரம் மாவட்டத்தில் போக்சோ நீதிமன்றம் ஆரம்பிக்கப்படும்' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கடந்த 5ம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பால், காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள், போலீசார் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள தாலுகா வளாகத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்திலேயே செயல்பட உள்ளது.
மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல், போக்சோ வழக்குகளை விசாரிக்க உள்ளார். போக்சோ நீதிமன்றத்துக்கான தனி கட்டடம் இன்னும் அமைக்கப்படவில்லை. முதன்மை நீதிமன்றத்திலேயே போக்சோ வழக்குகளும் விசாரிக்கப்பட உள்ளன. தனியாக கட்டடம் அமைத்த பிறகே தனி கட்டடத்தில் இயங்கும்.
- கார்த்திகேயன்,
அரசு தரப்பு வழக்கறிஞர்,
காஞ்சிபுரம்.