ADDED : ஏப் 19, 2026 09:56 PM

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே, புதிதாக கட்டப்படும் கட்டட பகுதியில், ஒரு டன் அலுமினியம் உள்ளிட்ட ஆறு லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்களை திருடிய மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், தனியார் அபார்ட்மெண்ட் கட்டப்பட்டு வருகிறது. சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், அங்கு செக்யூரிட்டியாக பணிபுரிகிறார்.
கடந்த ஏப்., 18ம் தேதி நள்ளிரவு 12:45 மணிக்கு, அங்கு வந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பொருட்களை திருடி, தப்ப முயன்றனர். செக்யூரிட்டி, உடனிருந்தவர்கள் கவனித்தபோது, கத்தியை காட்டி மிரட்டி தப்பிக்க முயன்றபோது, அவர்களை மடக்கி, மாமல்லபுரம் போலீசாரிடம் தெரிவித்தனர்.
போலீசார் சென்று பார்த்தபோது, ஒரு டன் அலுமினிய பொருட்கள், வெல்டிங், கட்டிங், டிரில்லிங் ஆகிய மெஷின்கள் உள்ளிட்ட ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடியிருப்பது தெரிந்தது.
இதுதொடர்பாக, கல்பாக்கம் அடுத்த, ஆயப்பாக்கத்தைச் சேர்ந்த விஜய், 32; சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த வெங்கடேசன், 46; மாமல்லபுரம் அடுத்த, வடகடம்பாடியைச் சேர்ந்த ஆஷிக், 19 ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து, செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர். அவர்கள் பயன்படுத்திய, ஸ்பிளெண்டர், பல்சர் என, இரண்டு இருசக்கர வாகனங்கள், சுசூகி கார், சரக்கு வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
