/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
3,000 ஆண்டுக்கு முந்தைய ஈமச்சின்னங்கள் ஆமூர் அகழாய்வில் தொல்லியல் துறை கண்டுபிடிப்பு
/
3,000 ஆண்டுக்கு முந்தைய ஈமச்சின்னங்கள் ஆமூர் அகழாய்வில் தொல்லியல் துறை கண்டுபிடிப்பு
3,000 ஆண்டுக்கு முந்தைய ஈமச்சின்னங்கள் ஆமூர் அகழாய்வில் தொல்லியல் துறை கண்டுபிடிப்பு
3,000 ஆண்டுக்கு முந்தைய ஈமச்சின்னங்கள் ஆமூர் அகழாய்வில் தொல்லியல் துறை கண்டுபிடிப்பு
ADDED : மார் 27, 2025 01:33 AM

சென்னை:மத்திய தொல்லியல் துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், ஆமூரில் நடக்கும் அகழாய்வில், 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமச்சின்னங்கள் வெளிப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இருந்து, 12 கி.மீ., தொலைவில், திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலைக்கு அருகில், சிருத்தாவூருக்கு தெற்கே, ஒரு ஏரியால் பிரிக்கப்பட்டுள்ளது ஆமூர் கிராமம்.
காப்புக்காடு
இங்கு, 290.71 ஏக்கர் பரப்பளவில் ஈமச்சின்னங்கள் உள்ளதை, மத்திய தொல்லியல் துறை, கடந்த 1948ல் கண்டறிந்தது. அதில் தற்போது, 63.50 ஏக்கர் காப்புக்காடு உள்ளது.
இந்த தொல்லியல் மேட்டில் தான், ஆமூர் கிராமம் உள்ளது. இந்த ஊரைப் பற்றி, 2,000 ஆண்டு களுக்கு முற்பட்ட இலக்கியங்களான சிறுபாணாற்றுப்படை, ஐங்குறுநுாறு, அகநானுாறு, புறநானுாறு, நற்றிணை உள்ளிட்டவற்றில் குறிப்புகள் உள்ளன.
மேலும், பல்லவ, சோழ, பாண்டிய, விஜய நகர மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு குறிப்புகளும் உள்ளன.இந்த ஊர், சோழர் காலத்தில், ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில், ஆமூர் கோட்டமும், களத்துார் கோட்டமும் முக்கிய நிர்வாக பகுதிகளாக இருந்துள்ளன.
ஆமூர் கோட்டத்தில், மொண்டூர், முகந்துார், ஆமூர், சிறுகுன்றம், குமிலி, படுவூர், காயார் ஆகிய நாடுகள், நிர்வாக உட்பகுதிகளாக இருந்துள்ளன.
தொடர்ச்சியான வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த ஊரில், கடந்தாண்டு மத்திய தொல்லியல் துறை கள ஆய்வு செய்து, மூன்று முக்கிய பெருங்கற்கால ஈமச்சின்னங்களை கண்டறிந்தது.
அப்பகுதியில் அகழாய்வு செய்வதற்கான அனுமதியை, மத்திய அரசிடம் பெற்று, இம்மாதம் துவக்கத்தில் அகழாய்வை துவக்கியது. அவற்றில், 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமச்சின்னங்கள் வெளிப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டார கண்காணிப்பாளர் காளிமுத்து கூறியதாவது:
ஆமூரில் மூன்று கல்வட்டங்களில், அகழாய்வு மேற்பார்வையாளர் ராஜேஷ் தலைமையில் அகழாய்வு துவங்கியுள்ளது. இதுவரை, இங்கு நேரடி புதைப்புக்கான சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை.
இறந்தோருக்கு நினைவிடமாக இங்கு, கல்வட்டம், கல் பதுக்கை அமைத்ததற்கான சான்றுகள் தான் கிடைத்துள்ளன. ஒரு கல்வட்டத்தில் இரண்டு வட்டங்களும், மத்தியில் சரளைக் குவியலும் இருந்தன.
இரண்டாம் கல் பதுக்கையில், கத்தி போன்ற இரும்பு பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பதுக்கையில், கருப்பு - சிவப்பு நிறத்திலான சுடுமண் கிண்ணங்கள் அடுக்காகவும், தட்டுகள் இருபுறத்திலும் அடுக்கப்பட்ட நிலையிலும், நொறுங்கி கிடந்தன. மூன்று மணிகளும் கிடைத்துள்ளன.
இந்த இடங்களில் மேலும் அகழாய்வு தொடர்கிறது. இந்த ஊருக்கு அருகில் உள்ள சிறுதாவூரில், ஏற்கனவே மத்திய தொல்லியல் துறை அகழாய்வு செய்த நிலையில், இங்கு கிடைக்கும் பொருட்களுக்கும், அவற்றுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.
இதை வைத்து இவை 2,600 முதல் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக கணிக்கலாம்.
வாழ்விடம்
இதே ஊரில், கோசவர் மேடு என்ற பகுதியில், பழமையான வாழ்விட பகுதியை அடையாளம் கண்டுள்ளோம். இங்கு அகழாய்வு செய்ய, அறநிலையத் துறையின் அனுமதியை கோரி உள்ளோம்.
அதேபோல், காப்புக்காட்டு பகுதியில் உள்ள ஈமக்காட்டை அகழாய்வு செய்ய, வனத் துறையின் அனுமதியையும் கோரி உள்ளோம்.
இப்பகுதியில் ஏற்கனவே, கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகளும், பல்லவர், சோழர் கால கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. இப்பகுதியைச் சுற்றி, ஆயிரக்கணக்கான இடங்களில், தொல்லியல் சின்னங்கள் கிடைக்கின்றன. தொடர்ச்சியாக அகழாய்வு செய்தால், இப்பகுதியின் தொடர்ச்சியான வரலாற்றை அறிய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.