/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி, துரைப்பாக்கத்தில் ரூ.150 கோடியில் 4.5 கி.மீ.,க்கு மூடுகால்வாய் பணி வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை

ADDED : செப் 16, 2025 12:07 AM

செம்மஞ்சேரி:ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமுள்ள சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி, துரைப்பாக்கத்தில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க, வெள்ளத்தை பிரித்து அனுப்பும் வகையில், 150 கோடி ரூபாயில் மூடுகால்வாய் கட்டப்படுகிறது.
சென்னையின் புறநகரில் உள்ள 62 ஏரிகளில் வடியும் மழைநீர், ஒக்கியம்மடு வழியாக பகிங்ஹாம் கால்வாயை அடைந்து, அங்கிருந்து முட்டுக்காடு கடலில் கலக்கிறது. இந்த ஏரிகளின் ஒரு பகுதி வெள்ளம், செம்மஞ்சேரி கால்வாய் வழியாக செல்கிறது.
இந்த கால்வாயை அகலப்படுத்தினாலும், ஒக்கியம்மடு வழியாக, 12 கி.மீ., துாரம் வெள்ளம் சுற்றி செல்வதால், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், நுாக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.
இதனால், சுற்றி செல்லும் வெள்ளத்தை நேராக பகிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையில், மூடுகால்வாய் கட்ட மாநகராட்சி திட்டமிட்டது.
முதலில் செம்மஞ்சேரி, காந்தி நகர் பிரதான சாலை, நாவலுார் வழியாக, நேராக 2.5 கி.மீ., துாரத்தில் பகிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையில், மூடுகால்வாய் கட்ட திட்டமிடப்பட்டது.
கால்வாய் செல்லும் இடம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் வருவதால், நிர்வாக அனுமதிக்காக முடிவு எடுப்பது, நிதி ஒதுக்குவதில் காலதாமதம் ஆகும் என, மாநகராட்சி அதிகாரிகள் கருதியதால், அவ்வழியாக கால்வாய் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
மாறாக, செம்மஞ்சேரி கால்வாயில் செல்லும் வெள்ளத்தில் ஒரு பகுதியை, பகிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையில், நுாக்கம்பாளையம் சாலை, ஓ.எம்.ஆர்., மற்றும் டி.என்.எச்.பி., சாலை வழியாக, 4.5 கி.மீ., துாரத்தில் மூடுகால்வாய் கட்ட திட்டமிடப்பட்டது.
அதோடு, உட்புற சாலைகளில் உள்ள வடிகால்வாய்களும், இந்த மூடுகால்வாயில் இணைக்கப்பட உள்ளன.
இதற்கு, 150 கோடி ரூபாயில் பணி துவங்கியது. மூடுகால்வாய் பணி, மூன்று கட்டமாக நடைபெற உள்ளது. முதற்கட்ட பணி, நுாக்கம்பாளையம் சாலையில் துவங்கியது. இந்த மூடுகால்வாய், 3.5 மீட்டர் அகலம் வீதம், இரண்டு பகுதியாக பிரித்து, 7 மீட்டர் அகலத்தில் கட்டமைக்கப்படுகிறது.
இந்த பணி, 2026ம் ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கு பயன்பெறும் வகையில் கட்டமைக்கப்படுகிறது. அப்போது, ஒரு வினாடியில் 9 கன அடி வெள்ளம் இந்த கால்வாயில் செல்லும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.