/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைதீர்க்கும் கூட்டத்தில் 469 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர்க்கும் கூட்டத்தில் 469 மனுக்கள் ஏற்பு
ADDED : ஏப் 29, 2025 12:16 AM
செங்கல்பட்டு,
செங்கல்பட்டில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 469 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக, மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, மின் வசதி, அச்சிறுபாக்கம் பகுதியில் மின் அழுத்த குறைபாடு, வேலைவாய்ப்பு, சுய தொழில் துவங்க வங்கி கடன், சுடுகாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 469 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.
* பத்திர பதிவு நிறுத்தம்
புதுச்சேரி, வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஜெனார்த்தனன், சென்னை சக்திராஜா ஆகியோர் கலெக்டரிடம் அளித்த மனு: மதுராந்தகம் அருகே, 2 ஏக்கர் 26 சென்ட் நிலத்தை 2007ம் ஆண்டு வாங்கி, விவசாயம் செய்து வருகிறோம். தற்போது, 50 சென்ட் நிலத்தை, ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் வங்க விருப்பம் தெரிவித்தனர்.
அதன் பின், அச்சிறுபாக்கம் சார் - பதிவாளர் அலுவலரை அணுகி பதிவு குறித்து தெரிவித்தோம். கடந்த 24ம் தேதி பதிவுக்காக, அரசு வழிகாட்டி மதிப்பின்படி, முத்திரைத்தாள் 28,000 ரூபாய் மற்றும் அரசுக்கு சேர வேண்டிய கட்டணம் 10,510 ரூபாய் செலுத்தி 'டோக்கன்' பெற்று, சார்- பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை வழக்கறிஞர் வாயிலாக தாக்கல் செய்தோம்.
அப்போது, சார் - பதிவாளர் கோகுல் முருக பூபதி, இந்த இடத்தை சென்ட் முறையில் பதிவு செய்ய மாட்டேன். சதுரடி கணக்கில் தான் பதிவு செய்வோம் எனக் கூறினார்.
விவசாய நிலத்தை பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டதற்கு, அதிக பணம் கொடுத்தால் பதிவு செய்யப்படும் என தெரிவித்தார். சார் - பதிவாளர் செயல் அதிர்ச்சியை அளிக்கிறது.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட பதிவாளருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.