/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்த 47 வீடுகள் அகற்றம்
/
சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்த 47 வீடுகள் அகற்றம்
ADDED : நவ 23, 2024 01:10 AM

துரைப்பாக்கம்:சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 47 வீடுகள், நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன. கடும் எதிர்ப்பு தெரிவித்த எட்டு ஆக்கிரமிப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகராட்சியின் சோழிங்கநல்லுார் மண்டலம், 195 வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுக்குப்பம், வி.பி.ஜி., அவென்யு விரிவு மற்றும் மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில், சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து 47 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இப்பகுதி பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என அறிவித்து, வீடுகளை காலி செய்யும்படி, கடந்த ஆண்டு வனத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆனால், அப்பகுதியினர், 'தொடர்ந்து 30 ஆண்டுகளாக வசிக்கிறோம். வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்தி வருகிறோம். குடிநீர், மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, இடிக்க அனுமதிக்க மாட்டோம்' என, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வனத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீர் நிலைகளை ஆக்கிரமித்திருக்கும் வீடுகளை அகற்ற உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று வருவாய்த்துறையினர், வனத்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர், பலத்த போலீசார் பாதுகாப்புடன் வீடுகளை அகற்ற வந்தனர். ஆக்கிரமிப்பாளர்கள் சாலையில் அமர்ந்து, எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சு நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதையடுத்து, போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆக்கிரமிப்பாளர்களான லட்சுமி, 45, பத்மா, 50, பன்னீர்செல்வம், 55, ராஜா, 25, துரை, 23, ராமலிங்கம், 70, செல்வம், 58, ஸ்ரீராம், 45, ஆகிய எட்டு பேரை கைது செய்தனர்.
அவர்களில் லட்சுமி மயங்கி விழுந்ததால் அவரை, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலை விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகள் அகற்றப்பட்டன.