ADDED : மார் 09, 2026 05:57 AM

ஆர்.கே.பேட்டை: ஊரக வளர்ச்சி திட்டம் சார்பில் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள், காட்டுத்தீயில் கருகி நாசமாகின.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம் விடியங்காடு ஊராட்சியில், புதுார் மேடு கிராமத்தில் மரக்கன்று உற்பத்தி செய்யும் நாற்றாங்கால் அமைந்துள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள், விடியங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட மலைகள் மற்றும் மலையடிவாரத்தில் ஏராளமாக நடவு செய்யப்பட்டுள்ளன.
நாற்றாங்கால் உற்பத்தி, மரக்கன்று நடவு, மரக்கன்று பராமரிப்பு மற்றும் பாசன வசதி உள்ளிட்ட பணிகள், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விடியங்காடு ஒட்டிய பெத்தேல்புரம் பகுதியில் உள்ள மலையடிவாரத்தில், பெரும்திரள் மரக்கன்று நடவு திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டங்களாக, 5,000த்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த வாரம் விடியங்காடு ஒட்டிய மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதில், மலையில் உள்ள ஏராளமான மரங்களும், மலையடிவாரத்தில் பெரும்திரள் மரக்கன்று நடவு திட்டத்தின் கீழ் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளும் தீயில் கருகி நாசமாகியுள்ளன.
கோடை காலத்திற்கு முன்பாகவே, காடுகளில் தீ தடுப்பு கோடுகள் ஏற்படுத்தி இருந்தால், மரங்களையும், மரக்கன்றுகளையும் காப்பாற்றி இருக்கலாம் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
