/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் 6 காவல் நிலையங்கள் இன்ஸ்பெக்டர் நிலைக்கு தரம் உயர்வு
/
செங்கையில் 6 காவல் நிலையங்கள் இன்ஸ்பெக்டர் நிலைக்கு தரம் உயர்வு
செங்கையில் 6 காவல் நிலையங்கள் இன்ஸ்பெக்டர் நிலைக்கு தரம் உயர்வு
செங்கையில் 6 காவல் நிலையங்கள் இன்ஸ்பெக்டர் நிலைக்கு தரம் உயர்வு
ADDED : ஜூன் 11, 2025 02:38 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், குற்ற சம்பவங்களைத் தடுக்கவும், வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கவும், சப் - இன்ஸ்பெக்டர் நிலையில் இருந்த ஆறு காவல் நிலையங்களை, இன்ஸ்பெக்டர் நிலைக்கு தரம் உயர்த்தி, அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர், பாலுார் காவல் நிலைய அதிகாரியாக செயல்பட்டார்.
இதேபோல், திருக்கழுக்குன்றம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சட்ராஸ் காவல் நிலையத்தையும், திருப்போரூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், காயார் காவல் நிலையத்தையும், செய்யூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், அணைக்கட்டு காவல் நிலையத்தையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தனர்.
மேல்மருவத்துார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சித்தாமூர் காவல் நிலையத்தையும், அச்சிறுபாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஒரத்தி காவல் நிலையத்தையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து, விசாரணை அதிகாரிகளாக செயல்பட்டு வந்தனர்.
இந்த காவல் நிலையங்களில், சப்- இன்ஸ்பெக்டர், தலைமை போலீஸ்காரர் மற்றும் போலீசார் பணிபுரிந்து வந்தனர்.
மேற்கண்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெறும் கொலை, வீடு புகுந்து திருட்டு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை மற்றும் கோவில் திருவிழா பாதுகாப்பு உள்ளிட்டவற்றை, போலீசார் கவனித்து வந்தனர்.
வழக்குகள் தேக்கம் அடைந்ததால், பொதுமக்கள் மனுக்கள் மீது உடனுக்குடன் விசாரணை நடைபெறுவதிலும் சிக்கல் இருந்து வந்தது.
தற்போது, இப்பகுதிகளில் குடியிருப்புகள், நிறுவனங்கள் போன்றவை அதிகரித்துள்ளதால், குற்றச் சம்பவங்களும் அதிகரித்து உள்ளன. இதனால், சப் - இன்ஸ்பெக்டர் நிலையில் விசாரணை நடைபெறுவதில், காலதாமதம் ஏற்படுகிறது.
இதனால், சப் - இன்ஸ்பெக்டர் நிலையில் உள்ள காவல் நிலையங்களை, இன்ஸ்பெக்டர் நிலையில் தரம் உயர்த்த வேண்டும் என, செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் இருந்து, காவல் துறை தலைவர் மற்றும் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் படாளம், காயார், சட்ராஸ், அணைக்கட்டு, சித்தாமூர், ஒரத்தி ஆகிய காவல் நிலையங்களை சப் - இன்ஸ்பெக்டர் நிலையில் இருந்து, இன்ஸ்பெக்டர் நிலைக்கு அரசு தரம் உயர்த்தி, கடந்த மே 29ம் தேதி உத்தரவிட்டது.
இந்த காவல் நிலையங்களில், புதிய இன்ஸ்பெக்டர்கள் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில், காவல் நிலையங்கள் இன்ஸ்பெக்டர் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டாலும், மக்கள் தொகைக்கு ஏற்ப போலீசாரை நியமிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆறு காவல் நிலையங்கள் இன்ஸ்பெக்டர் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டதால், வழக்குகள் விசாரணை விரைவாக நடைபெறும். மக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
- காவல் துறை அதிகாரிகள்,
செங்கல்பட்டு