/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
7,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்பு கூடு கண்டெடுப்பு
/
7,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்பு கூடு கண்டெடுப்பு
7,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்பு கூடு கண்டெடுப்பு
7,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்பு கூடு கண்டெடுப்பு
ADDED : பிப் 27, 2024 11:08 PM

மாமல்லபுரம்:சென்னை பல்கலைக்கழக பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் துறையினர், செங்கல்பட்டு மாவட்டம், படாளம் அடுத்த, செட்டிமேடு பாத்துார் பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன், மேற்பரப்பு கள ஆய்வு நடத்தினர். அப்போது, புதிய கற்கால கருவிகள், பானை ஓடுகள் உள்ளிட்டவை இருந்ததை கண்டனர்.
அதன்பின், அப்பகுதியில் அகழாய்வு நடத்த, இந்திய தொல்லியல் துறை அனுமதித்தது. இதையடுத்து, பல்கலைக்கழக துறை தலைவர் சவுந்தர்ராஜன் வழிகாட்டுதலில், இரண்டாம் ஆண்டு மாணவ குழுவினர், அப்பகுதி ஆர்.சி., சர்ச் வளாக பகுதியில், கடந்த 5ம் தேதி அகழாய்வை துவக்கினர்.
தலா இரண்டு மீட்டர் ஆழத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டன. ஒரு குழியில், 7,000 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட, புதிய கற்காலத்தைச் சேர்ந்த மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து, சவுந்தர்ராஜன் கூறியதாவது:
இப்பகுதியில், புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்கள் இருந்ததால், அகழாய்வு நடத்தினோம். 2 மீட்டர் ஆழத்தில், 7,000 ஆண்டுகளுக்கு முந்தைய, 9 - 11 வயது மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
ஆணா, பெண்ணா என்பதை, உரிய ஆய்விற்கு பிறகே கண்டறிய முடியும். பழங்கால கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், செங்கல், சோழர் கால நாணயங்கள் உள்ளிட்டவையும் கிடைத்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

