/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி... 87.38 சதவீதம் !:கடந்தாண்டை விட 0.89 சதவீதம் சரிவு
/
செங்கையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி... 87.38 சதவீதம் !:கடந்தாண்டை விட 0.89 சதவீதம் சரிவு
செங்கையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி... 87.38 சதவீதம் !:கடந்தாண்டை விட 0.89 சதவீதம் சரிவு
செங்கையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி... 87.38 சதவீதம் !:கடந்தாண்டை விட 0.89 சதவீதம் சரிவு
ADDED : மே 11, 2024 01:08 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 87.38 சதவீதம் மாணவ- - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு, கடந்த ஆண்டை விட 0.89 சதவீதம் தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது எனவும், கிராமப்புற அரசு பள்ளிகளில், தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாகவும், கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம் என, இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்தில், 361 இடைநிலைப் பள்ளிகள் உள்ளன.
இதில், அரசு, நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 148 பள்ளிகளும், 39 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 174 மெட்ரிக்குலேசன் மற்றும் சுயநிதி பள்ளிகளும் அடங்கும்.
இப்பள்ளிகளில் இருந்து, 15,968 மாணவர்களும், 15,948 மாணவியரும் என, 31,916 பேர் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில், 13,317 மாணவர்களும், 14,572 மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 83.4 சதவீதமும், மாணவியர் 91.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர்.
அரசு, நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளைச் சார்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 14,003.
இதில், 11,091 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 79.20 சதவீதம்.
அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில், தேர்வு எழுதிய மாணவர்கள் 5,140ல் 4,481 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 87.71.
மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில் தேர்வு எழுதிய, 12,773 பேரில், 12,317 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.42.
கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 88.65 ஆக இருந்தது. அப்போது, மாநில அளவில் செங்கல்பட்டு மாவட்டம் 34வது இடம் பெற்றது.
இந்த ஆண்டு 0.89 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. எனினும், மாநில அளவில் 33வது இடம் பிடித்துள்ளதாக, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், நேர்முக உதவியாளர்கள் உதயகுமார், சிவக்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என, பாடங்களை புரிந்து படித்தேன். ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் எவ்வாறு படிக்க வேண்டும் என, நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தனர். 496 மதிப்பெண் பெற்று, மாவட்டத்தில் முதல் இடம் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. 11ம் வகுப்பில் உயிரியல் பாடம் எடுத்து படிக்க உள்ளேன். நீட் தேர்வு எழுதி, மருத்துவராக வேண்டும் என குறிக்கோளுடன் படித்து வருகிறேன்.
- கோ.ஸ்ரீலேகா,
அரசு மாதிரி உண்டு உறைவிட பள்ளி, சட்டமங்கலம்.
நான், 488 மதிப்பெண் எடுத்து, பள்ளி அளவில் முதலாவதாக வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என் அப்பா, அம்மா, அண்ணன், ஆசிரியர்கள் தான், நான் படிப்பதற்கு அதிக ஊக்கத்தையும், ஒத்துழைப்பையும் கொடுத்தனர். என் அப்பா ஓட்டுனர் என்பதால், குறைந்த சம்பளம் தான். அதனால், நன்றாக படித்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதை உணர்ந்து படித்தேன். அறிவியல் பாடத்தில், 100க்கு 100 மதிப்பெண்களும், கணிதம், சமூக அறிவியல் பாடங்களில், 100க்கு 99 மதிப்பெண்களும் எடுத்துள்ளேன்.
- எ.கிருத்திகா,
அரசு மேல்நிலைப் பள்ளி, மாம்பாக்கம்.
என் தந்தை சீனிவாசன், விவசாய கூலி வேலை செய்து வருகிறார். படிப்பு ஒன்றே வாழ்க்கையில் உயர்வை தரும் என கருதி படித்தேன். பள்ளியில் பாட ஆசிரியர்கள் நன்றாக ஊக்கப்படுத்தினர். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கூடுதல் கவனமுடன் படித்து, நல்ல மதிப்பெண் பெற்று, நீட் தேர்வு எழுதி, மருத்துவராக ஆசைப்படுகிறேன்.
- சீ.அனுசுயா,
10ம் வகுப்பு, அரசினர் உயர்நிலைப் பள்ளி, -வடமணிப்பாக்கம்.
என் தந்தை பரசுராமன், கடந்த 2020ல் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அதன் பின், தாய் ரமணி தான் கூலி வேலை செய்து என்னையும், என் அண்ணன், தங்கையையும் படிக்க வைக்கிறார். புத்திரன்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தேன். கடின உழைப்பாலும், ஆசிரியர்களின் ஆலோசனைகளாலும் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளேன். அறிவியலில் அதிக ஆர்வம் உள்ளது. எதிர்காலத்தில் டாக்டராக விரும்புகிறேன்.
- ப.ரோஷினி,
அரசு உயர்நிலைப் பள்ளி, புத்திரன்கோட்டை.
நாங்கள் கூடுவாஞ்சேரி குமரன் நகர் பகுதியில் வசித்து வருகிறோம். என் தந்தை ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என, இலக்கு நிர்ணயித்து படித்தேன். எனது முயற்சிகளுக்கு பெற்றோரும், பள்ளி ஆசிரியர்களும் ஊக்கமளித்ததன் காரணமாக, அதிக மதிப்பெண் பெற முடிந்தது.
- அபிராமி,
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நந்திவரம்.