/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கேளம்பாக்கத்தில் 16 நாவலுாரில் 9 கிராமங்கள்... இணைப்பு:பட்டியல் வெளியிட்டு பதிவுத்துறை நடவடிக்கை
/
கேளம்பாக்கத்தில் 16 நாவலுாரில் 9 கிராமங்கள்... இணைப்பு:பட்டியல் வெளியிட்டு பதிவுத்துறை நடவடிக்கை
கேளம்பாக்கத்தில் 16 நாவலுாரில் 9 கிராமங்கள்... இணைப்பு:பட்டியல் வெளியிட்டு பதிவுத்துறை நடவடிக்கை
கேளம்பாக்கத்தில் 16 நாவலுாரில் 9 கிராமங்கள்... இணைப்பு:பட்டியல் வெளியிட்டு பதிவுத்துறை நடவடிக்கை
UPDATED : ஆக 08, 2025 06:50 AM
ADDED : ஆக 08, 2025 02:12 AM

சென்னை:திருப்போரூர் சார் -- பதிவாளர் அலுவலகம் மூன்றாக பிரிக்கப்பட்ட நிலையில் நாவலுார், கேளம்பாக்கம் சார் -- பதிவாளர் அலுவலகங்களில் இணையும் கிராமங்களின் விபரங்களை, பதிவுத்துறை வெளியிட்டு உள்ளது.
செங்கல்பட்டு மண்டலத்தில் அமைந்துள்ள திருப்போரூர் சார் -- பதிவாளர் அலுவலகம், 1886ல் துவக்கப்பட்டது.
பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் அமைந்துள்ள, 50 கிராமங்கள், இந்த அலுவலக எல்லை வரம்பாக அமைந்திருந்தன.
இப்பகுதியில் சொத்துகளின் மதிப்பு மிக அதிகம் என்பதுடன், ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளும் அதிகமாக இருக்கும்.
திருப்போரூர் சார் -- பதிவாளர் அலுவலகத்தில், ஆண்டுக்கு 25,000 பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதனால், இங்கு வேலை செய்ய, சார் -- பதிவாளர்கள், பணியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது.
கோடிக்கணக்கில் பணம் புரளும் இந்த அலுவலகத்தின் எல்லைகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டன. மேலும், இந்த அலுவலகத்தில் கூட்ட நெரிசல், இட நெருக்கடி போன்ற பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகின்றன.
இதனால், திருப்போரூர் சார் -- பதிவாளர் அலுவலகத்தை, வேறு இடத்திற்கு மாற்ற ஆய்வு செய்யப்பட்டது. இதற்கு, பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது.
காரணம், சட்டசபை தொகுதியின் தலைமையிடமாகவும், ஒன்றிய, வட்ட தலைமையிடமாகவும் திருப்போரூர் உள்ளது.
இங்கு தாலுகா, ஒன்றிய அலுவலகம், கல்வித்துறை அலுவலகம், மின் வாரிய அலுவலகம் உள்ளிட்ட அனைத்து தலைமை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
பல்வேறு சேவைகளுக்காக வரும் பொதுமக்கள், ஒரே இடத்தில் தங்கள் வேலைகளை முடித்துச் செல்கின்றனர்.
திருப்போரூர் சார் -- பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்தால், அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என வழக்கறிஞர்கள், ஆவண எழுத்தர்கள், அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த எதிர்ப்பால், திருப்போரூர் சார் -- பதிவாளர் அலுவலகத்தை முழுமையாக இடமாற்றம் செய்வது கைவிடப்பட்டது.
அதற்கு மாற்றாக, திருப்போரூர் சார்- பதிவாளர் அலுவலகத்தை கேளம்பாக்கம், நாவலுார், வண்டலுார் ஆகிய மூன்று அலுவலகங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, அந்தந்த பகுதிகளில் தற்காலிக இடங்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்தன.
தற்போது முதற்கட்டமாக, கேளம்பாக்கத்தில் அன்னை சமுதாய நலக்கூடத்திலும், நாவலுாரில் அறிஞர் அண்ணா சமுதாய நலக்கூடத்திலும் சார் - பதிவாளர் அலுவலகம் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதன்படி நாவலுார், கேளம்பாக்கம் ஆகிய புதிய சார் - பதிவாளர் அலுவலகங்களை 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார்.
இந்நிலையில் நாவலுார், கேளம்பாக்கம் சார் -- பதிவாளர் அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் வரும் கிராமங்கள் குறித்த விபரங்களை, பதிவுத்துறை அறிவித்துள்ளது.
இதன்படி, கேளம்பாக்கம் அலுவலகத்தில் 16 கிராமங்களும், நாவலுார் அலுவலகத்தில் 9 கிராமங்களும் சேர்க்கப்பட்டு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.