/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனி மையம்! செங்கை மருத்துவமனையில் குடி, போதை பழக்கத்திலிருந்து மீட்க... 21 நாட்களுக்கு நவீன சிகிச்சை அளித்து கண்காணிக்கவும் திட்டம்
/
தனி மையம்! செங்கை மருத்துவமனையில் குடி, போதை பழக்கத்திலிருந்து மீட்க... 21 நாட்களுக்கு நவீன சிகிச்சை அளித்து கண்காணிக்கவும் திட்டம்
தனி மையம்! செங்கை மருத்துவமனையில் குடி, போதை பழக்கத்திலிருந்து மீட்க... 21 நாட்களுக்கு நவீன சிகிச்சை அளித்து கண்காணிக்கவும் திட்டம்
தனி மையம்! செங்கை மருத்துவமனையில் குடி, போதை பழக்கத்திலிருந்து மீட்க... 21 நாட்களுக்கு நவீன சிகிச்சை அளித்து கண்காணிக்கவும் திட்டம்
UPDATED : டிச 25, 2024 02:01 AM
ADDED : டிச 25, 2024 01:59 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மனநல பிரிவில், குடி மற்றும் போதை பழக்கத்திலிருந்து மீட்கும் மையம் துவக்கப்பட உள்ளன. இந்த மையத்தை, போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், மனநல பிரிவு உள்ளது. இப்பிரிவில், குடி மற்றும் போதை பழக்கத்திலிருந்து மீட்கும் சிகிச்சைக்காக, உள்நோயாளிகள், புறநோயாளிகள் சிகிச்சை பெற வசதிகள் உள்ளன.
இங்கு குடிப்பழக்கம், புகையிலை, கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், போதைக்கு அடிமையானவர்களை மீட்க, தனி மையம் இல்லை.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 25 அரசு மருத்துவமனைகளில், குடி மற்றும் போதை பழக்கத்திலிருந்து மீட்கும் கிகிச்சை மையம் தனியாக அமைக்க, 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த மையங்களில், 20 படுக்கைகள், மன நல மருத்துவர், உளவியல் மருத்துவர், செவிலியர், மனநல சமூக சேவகர் ஆகியோர் கொண்ட குழு வாயிலாக, குடி மற்றும் போதைப்பொருள் பழக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை, உளவியல் சிகிச்சை, குழு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்படும்.
இங்கு, தனியார் மருத்துவமனை மற்றும் போதை மறுவாழ்வு மையங்களுக்கு நிகரான, மறுவாழ்வு முறை சிகிச்சை வழங்கப்பட உள்ளது.
இந்த சிகிச்சை முறையாக, 21 நாட்கள் அளிக்கப்படும். தனியார் மையங்களைப் போல், சில நாட்களுக்குப் பின், நோயாளிகள் தனியாகவே இம்மையத்தில் தங்கி, இந்த சிகிச்சை பெறலாம்.
இதில் இளம் சிறார்கள், பெண்களுக்கென, தனிப்பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும், சிகிச்சை முடிந்து வீட்டிற்குச் சென்ற பிறகும், அவர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனரா என, மாவட்ட மனநல திட்டம் வாயிலாக கண்காணிக்கப்படும்.
அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தொடர் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
தனியார் மையங்களில், அதிக பணம் செலவழித்து சிகிச்சை பெறும் மக்கள், அரசு மருத்துவமனைகளில் துவக்கப்படும் இந்த மீட்டு மையத்தில் இலவசமாக மற்றும் முறைப்படியான சிகிச்சை பெறலாம்.
போதை பழக்கம் அதிகரித்தும் வரும் சூழலில், இம்மாதிரியான சிகிச்சை மையங்கள், அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்படுவது, மக்களுக்கு பயன் உள்ளதாக அமையும்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மனநல பிரிவு இயங்கி வருகிறது. இங்கு, குடி மற்றும் புகையிலை கஞ்சா பழக்கத்தால் பாதிக்கப்பட்ட, 20 வயது முதல் 50 வயது வரை, உள்ளவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
புறநோயாளிகளாகவும், உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, போதை பழக்கத்திற்கு அடிமையாகும் இளம் சிறார்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், குடி மற்றும் போதை பழக்கத்திலிருந்து மீட்கும் மையத்திற்கு தனியாக புதிய கட்டடம், 20 படுக்கை வசதிகளுடன் 90 லட்சம் ரூபாய் மதிப்பில் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இம்மையத்தை விரைவில், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இதனால் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள், மேற்கண்ட மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனை மன நலப்பிரிவில், குடி மற்றும் இதர போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் சிகிச்சை பெற்று, மீண்டு வருகின்றனர். தற்போது, குடி மற்றும் போதை பழக்கம் தடுப்பு தனி பிரிவு, 20 படுக்கை வசதிகள் மற்றும் நவீன சிகிச்சை முறைகளுடன் மேம்படுத்தப்பட்டு உள்ளது. முறையாக, 21 நாட்கள் சிகிச்சை வழங்கப்படும். உடன் கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லாவிட்டாலும், தனியாக சிகிச்சை பெற்றுக்கொள்ள வசதி உள்ளது.
- மனநலப் பிரிவு டாக்டர்கள்,
செங்கல்பட்டு