/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முருகன் கோவில்களில் ஆடிகிருத்திகை விமரிசை
/
முருகன் கோவில்களில் ஆடிகிருத்திகை விமரிசை
ADDED : ஆக 17, 2025 01:13 AM

மறைமலை நகர்:சிங்கப்பெருமாள் கோவில் சிங்கை சிங்கார வேலன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே ஸ்டேஷன் தெருவில் பழமையான சிங்கை சிங்கார வேலன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். நேற்று காலை 7:00மணிக்கு அனுமந்தபுரம் சாலையில் உள்ள குளக்கரையில் இருந்து 108 பால்குட ஊர்வலம் இருந்து புறப்பட்டு 8:30 மணிக்கு கோவிலில் வந்தடைந்தவுடன் மகா அபிஷேகம் நடைபெற்றது. 10:30 மணிக்கு அக்னி சட்டி நிகழ்சியும், அதனை தொடர்ந்து சிங்கார வேலனுக்கு மிளகாய் பொடி அபிஷேகம், மஞ்சள் இடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலையணிந்து விரமிருந்த பக்தர்களின் வேண்டுதலான சடல் சுற்றுதல்,ஆகாய மாலை போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.ஆகாய மார்க்கத்தில் வந்த பக்தர்கள் உற்சவருக்கு மாலை அணிவித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
அதனை தொடர்ந்து 108 வேல் குத்துதல், உரல் இழுத்தல், காவடி எடுத்தல், ஆட்டோ இழுத்தல்,தீ மிதித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அப்போது கோவிலை சுற்றி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி பரவசமடைந்தனர்.இதில் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மறைமலை நகர்
மறைமலை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள செல்வ முத்துக்குமாரசுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு 108 பால்குடம் எடுக்கப்பட்டது.
பால் அபிஷேகம் நடைபெற்று சந்தன காப்பு அலங்காரத்தில் செல்வ முத்துக்குமாரசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

