கூவத்துாரில் கழிவுநீர் வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை தேவை
கூவத்துாரில் கழிவுநீர் வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை தேவை
ADDED : ஏப் 15, 2026 04:22 AM

கூவத்துார்: கூவத்துார் ஊராட்சியில் கழிவுநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூவத்துார் ஊராட்சியில் கீழார் கொல்லை, தென்மாடவீதி, கீழாண்டை, மேலாண்டை தெருக்கள், மலையூர் போன்ற பல பகுதிகளில் 1,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள புதிய காலனி, பழைய காலனி, மாரியம்மன் கோவில் தெரு, படைவீட்டம்மன் கோவிலை சுற்றியுள்ள தெருக்களில் கழிவுநீர் வடிகால்வாய் வசதி இல்லை.
இதனால், அப்பகுதி மக்கள், தாங்களாகவே கழிவுநீர் வடிகால்வாய் அமைத்து வீட்டு கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர்.
மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் மண் வடிகால்வாயாக உள்ளதால் கழிவுநீர் செல்ல முடியாமல் அடைத்து நிற்கிறது.
இதனால், மழைகாலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தெருவிற்குள் செல்கிறது. மேலும், கழிவுநீர் தேக்கத்தால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: அதிக மக்கள் தொகை உள்ள கூவத்துார் ஊராட்சியில் கழிவுநீர் வடிகால்வாய் வசதி வேண்டும்.
புதிய காலனி மற்றும் மாரியம்மன் கோவில் தெரு சந்திப்பில் இருக்கும் தரைப்பாலம் வடிகால்வாயுடன் இணைத்து கழிவுநீர் வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கால்வாய் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
