/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒத்திவாக்கம், கருங்குழி ரயில்வே மேம்பால பணி ஓராண்டுக்குள் முடிக்க ஒப்பந்ததாரருக்கு கண்டிப்பு
/
ஒத்திவாக்கம், கருங்குழி ரயில்வே மேம்பால பணி ஓராண்டுக்குள் முடிக்க ஒப்பந்ததாரருக்கு கண்டிப்பு
ஒத்திவாக்கம், கருங்குழி ரயில்வே மேம்பால பணி ஓராண்டுக்குள் முடிக்க ஒப்பந்ததாரருக்கு கண்டிப்பு
ஒத்திவாக்கம், கருங்குழி ரயில்வே மேம்பால பணி ஓராண்டுக்குள் முடிக்க ஒப்பந்ததாரருக்கு கண்டிப்பு
ADDED : பிப் 17, 2024 01:47 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கத்தில் ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இப்பகுதி வாசிகள் வெளி இடங்களுக்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது, கடவுப்பாதையை கடந்து தான் செல்ல வேண்டும்.
ரயில் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், அடிக்கடி கடவுப்பாதை மூடப்படுகிறது. இதனால், சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, புதிதாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என, மத்திய - மாநில அரசிடம் நீண்டகாலமாக இப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்பின், ரயில்வே துறையினர் கடவுப்பாதையில் கடக்கும் வாகனங்களை கணக்கெடுப்பு நடத்தியதில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வதை கண்டறிந்தனர்.
இதனால், ரயில்வே மேம்பாலம் கட்டலாம் என, உயர் அதிகாரிகளிடம் ரயில்வே துறையினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு - ஒத்திவாக்கம் ரயில்வே நிலையங்களுக்கு இடையே 2011 - 12ம் ஆண்டு, 30.40 கோடி ரூபாய் மதிப்பில், சாலை மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ரயில்வே நிர்வாகம், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன், தண்டவாள பகுதியில் மேம்பாலம் கட்டும் பணியை முடித்தது. ஆனால், நெடுஞ்சாலைத் துறையினர் மேம்பால பணி மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டனர்.
அதன்பின், 2018ம் ஆண்டு, 33.24 கோடி ரூபாய்க்கு, தொழில்நுட்ப ஒப்புதல் அனுமதி வழங்கியது. இப்பணிக்கு திருத்திய மதிப்பீடு, 2021 மார்ச் 24ம் தேதி ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், மேம்பால பணிக்கு, 26.58 கோடி ரூபாய்க்கு 'டெண்டர்' விடப்பட்டது. இப்பணியை மேற்கொள்ள, 'ஈரோடு மயான்ஸ் இன்பிராஸ்ட்ரக்சர்' நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ரயில்வே மேம்பால பணியை, கடந்தாண்டு மார்ச் மாதம் 12ம் தேதி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்.
இப்பணியை, ஆகஸ்ட் மாதம் 5ம் தேதிக்குள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு, நெடுஞ்சாலைத் துறையினர் உத்தரவிட்டனர்.
ஆனால், மேம்பால பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதேபோல், படாளம் - கருங்குழி ரயில்வே நிலையங்களுக்கு இடையே 29.40 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டு, கடந்தாண்டு பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பால பணியை, வரும் டிசம்பர் மாதத்திற்குள்ளும், கருங்குழி ரயில்வே மேம்பால பணியை, அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள்ளும் முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை துறை கோட்ட அதிகாரிகள்,
செங்கல்பட்டு.