திறந்தவெளி, கால்வாயில் கழிவுநீர் ஊற்றி அட்டூழியம் மீண்டும்... மீண்டும்!
திறந்தவெளி, கால்வாயில் கழிவுநீர் ஊற்றி அட்டூழியம் மீண்டும்... மீண்டும்!
UPDATED : ஆக 06, 2026 10:33 PM
ADDED : ஆக 06, 2026 07:52 PM

மறைமலை நகர்: மறைமலை நகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் காலி வீட்டுமனை, மழைநீர் வடிகால், நீர்நிலைகளில் கழிவுநீர் கொட்டி, தனியார் கழிவுநீர் லாரி ஓட்டுநர்கள் அட்டூழியம் செய்து வருகின்றனர். பொது வெளியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க, ஆப்பூர் ஊராட்சியில் ஆறு கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தும் வீணாகி வருகிறது. கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாலே, இவ்வாறு நடப்பதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிகள் மற்றும் காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்டு 39 ஊராட்சிகள் உள்ளன.
இதில், சிங்கபெருமாள் கோவில், வீராபுரம், பரனுார், செட்டிபுண்ணியம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
நகராட்சிகள் மற்றும் 15 ஊராட்சிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில் தேங்கும் கழிவுநீரை, தனியார் டேங்கர் லாரிகள் ஒரு முறை எடுக்க 4,000 ரூபாய் வசூலித்து வருகின்றன.
இவ்வாறு எடுக்கப்படும் கழிவுநீர், மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி பகுதிகளைச் சுற்றியுள்ள காப்பு காடுகள், நெடுஞ்சாலை ஓரங்கள், வீட்டு மனை பிரிவுகள் மற்றும் நீர்நிலைகளில் நேரடியாக விடப்படுகிறது.
இதனால் சுகாதார சீர்கேடு, சுற்றுச்சூழல் மாசடைந்து, உயிரினங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதை தடுக்க, தேசிய கிராம நகரத்திட்டத்தின் வாயிலாக 6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்நிதியில், காட்டாங்கொளத்துார் ஒன்றியம் ஆப்பூர் ஊராட்சி தாலிமங்கலம் கிராமத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு நாளைக்கு 20,000 லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில், இந்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்தாண்டு அக்., மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் வெளியேற்றப்படும் கழிவுநீர், லாரிகள் மூலம் எடுத்து வரப்பட்டு, இந்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு அலகுகளில் கொட்டி, சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
இதில் இருந்து கிடைக்கும் நன்னீர், இதே பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் நடப்பட்டுள்ள மரங்களுக்கு விடப்படுகிறது.
ஆரம்பத்தில் சில நாட்கள் முறையாக கழிவுநீர் கொட்டப்பட்டது. தற்போது, தனியார் டேங்கர் லாரி உரிமையாளர்கள், இந்நிலையத்தை புறக்கணித்து, பழையபடி காலியான வீட்டு மனை, திறந்தவெளி கால்வாய், வடிகாலில் ஊற்றி வருகின்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மறைமலை நகர், பாலுார், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், ஓட்டேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 70க்கும் மேற்பட்ட தனியார் கழிவுநீர் டேங்கர் லாரிகள் உள்ளன. இதன் உரிமையாளர்கள் பெரும்பாலும், அரசியல் கட்சியைச் சேர்ந்தோராகவும், குற்றப் பின்னணி உடையவர்களாகவும் உள்ளனர்.
இதன் காரணமாக, போலீசார் அவர்களை கண்டுகொள்வதில்லை. மேலும், மாதந்தோறும் காவல் நிலையங்களுக்கு மாமூல் மற்றும் 'கணக்கு' காண்பிக்க, சில வழக்குகளை மட்டும் பதிவு செய்கின்றனர். காவல் துறை உயரதிகாரிகள் தலையிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட தொடங்கி 10 மாதங்களில், கலெக்டர் வீரப்பன் உட்பட பல அதிகாரிகளும் ஆய்வு செய்துள்ளனர். ஆனால், நீர்நிலைகளில் கழிவுநீர் கொட்டும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கெடுபிடி காட்டினால் தான், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மறைமலை நகர் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கழிவுநீரை அகற்றும் டேங்கர் லாரிகளுக்கு, நகராட்சி வாயிலாக தனியாக உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. திறந்த வெளியில் கழிவுநீர் ஊற்றும் வாகனங்கள் முதல் முறை 25,000 ரூபாய் அபராதமும், இரண்டாம் முறை 50,000 ரூபாய் அபராதமும், தொடர்ந்து அதே வாகனம் பிடிபட்டால், வாகனத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டதும் கழிவுநீர் லாரி ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. ஆப்பூரில் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீர் ஊற்ற அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆப்பூர் ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊராட்சி நிர்வாகம் சார்பில் பராமரித்து வருகிறோம். இரண்டு காவலாளிகளுக்கு மாதம் 22,000 ரூபாய் சம்பளமாக வழங்கி வருகிறோம். தினம் இரண்டு லாரிகள் மட்டுமே வருகின்றன.
இதுவரை 394 லோடு கழிவுநீர் வந்ததில், 1 லட்சத்து 79,300 ரூபாய் மட்டுமே வருவாயாக வந்துள்ளது. ஒரு லோடுக்கு வீட்டின் உரிமையாளர்களிடம் 4,000 ரூபாய் வரை வசூலிக்கும் தனியார் டேங்கர் லாரி உரிமையாளர்கள், சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை ஊற்றாமல் பொதுவெளியில் கொட்டி வருகின்றனர். ஆனால், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஊற்றுவதாக கூறி, கூடுதலாக 500 ரூபாய் வசூலித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
