/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
83 பள்ளிகளை மேம்படுத்த ரூ.4.43 கோடி ஒதுக்கீடு
/
83 பள்ளிகளை மேம்படுத்த ரூ.4.43 கோடி ஒதுக்கீடு
ADDED : அக் 01, 2024 12:32 AM
செங்கல்பட்டு, - செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய இரு கல்வி மாவட்டங்களில், மொத்தம் 143 பள்ளிகள் உள்ளன.
இங்கு, பராமரிப்பு மற்றும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என, பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன்பின், பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை, ஜன்னல், மின் இணைப்பு மற்றும் பொருட்கள் பராமரிப்பு பணிகள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிகளில் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின், பராமரிப்பு மற்றும் எலக்ட்ரிக்கல் பணிகள் குறித்தான கருத்துருவை, முதன்மை கல்வி அலுவலகம் அரசுக்கு அனுப்பி வைத்தது.
தொடர்ந்து, 2024- - 25ம் நிதியாண்டில், 83 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், பராமரிப்பு மற்றும் மேம்படுத்துதல் பணிகளை செய்ய, 4 கோடி 43 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது.
இதில், அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், உள் கட்டமைப்பு வசதி மற்றும் குடிநீர், கழிப்பறை பணிகளை தனி கவனத்துடன் செயல்படுத்த வேண்டும் என, கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது.
பொதுப்பணித் துறையினர் சார்பில் டெண்டர் விடப்பட்டு, விரைவில் பணிகளை செயல்படுத்த உள்ளனர் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.