/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருவிடந்தையில் 11 ஆயிரம் சதுர அடியில் திருமண மண்டபம் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் ரூ.4.30 கோடியில் தயாராகிறது
/
திருவிடந்தையில் 11 ஆயிரம் சதுர அடியில் திருமண மண்டபம் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் ரூ.4.30 கோடியில் தயாராகிறது
திருவிடந்தையில் 11 ஆயிரம் சதுர அடியில் திருமண மண்டபம் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் ரூ.4.30 கோடியில் தயாராகிறது
திருவிடந்தையில் 11 ஆயிரம் சதுர அடியில் திருமண மண்டபம் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் ரூ.4.30 கோடியில் தயாராகிறது
ADDED : ஜன 17, 2025 01:15 AM

மாமல்லபுரம்:திருமண தடை, தோஷ பரிகார தலமான திருவிடந்தையில், நித்ய கல்யாண பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில், 4.30 கோடி ரூபாய் மதிப்பில், 11 ஆயிரம் சதுர அடியில் திருமண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இறுதிகட்ட பணிகள் முடிந்து, விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தையில், நித்ய கல்யாண பெருமாள் கோவில் பிரசித்திபெற்றது. பாரம்பரிய தொன்மை சார்ந்து, இந்திய தொல்லியல் துறை, வழிபாடு சார்ந்து, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆகியவை, இக்கோவிலை நிர்வகிக்கின்றன.
தல வரலாறு
தேவர்களுடன் ஏற்பட்ட போரில், அவர்களை கொன்ற பலி மன்னன், இப்பாவத்தை போக்க, இத்தல இறைவனை வழிபட்டார். இறைவன் ஆதிவராக பெருமாளாக தோன்றி அருள்பாலித்தார். இது ஒருபுறமிருக்க, காலவ முனிவர், தன் 360 மகள்களை திருமணம் செய்யுமாறு, பிரம்மச்சாரி இறைவனிடம் வேண்டினார்.
இறைவனும் அவர்களை ஏற்று, கோமளவல்லி துவங்கி, தினசரி ஒருவர் என மணந்தார். எனவே, நித்ய கல்யாண பெருமாளாக விளங்குகிறார்.
மூலவர் ஆதிவராக பெருமாள், மனைவியரை ஒருங்கிணைத்து, இடது தொடையில் ஏந்தி, அகிலவல்லி தாயாருடன் வீற்றுள்ளார்.
உற்சவர் நித்ய கல்யாண பெருமாள் உற்சவர், கோமளவல்லி தாயாருடன் வீற்றுள்ளார். ரங்கநாதர் உள்ளிட்ட பிற சுவாமியரும் வீற்றுள்ளனர்.
இறைவன் தினசரி திருமணம் செய்ததால், திருமண தடை தோஷம் மற்றும் ராகு, கேது தோஷம் ஆகிய பரிகார நிவர்த்தி கோவிலாக சிறப்பு பெற்றது. அதன் மஹா கும்பாபிஷேகம், கடந்த 2018ல் நடந்தது.
திருமண தடை நிவர்த்திக்காக, பக்தர்கள் திரள்கின்றனர். சென்னை அருகில் கோவில் அமைந்துள்ள நிலையில், வார இறுதி, அரசு விடுமுறை நாட்களில், ஏராளமானோர், இங்கு வழிபடுகின்றனர். மேலும், திருமண தோஷ பரிகாரம் கருதி, கோவிலில் திருமணம் செய்ய விரும்புகின்றனர். ஆனால், கோவில் நிர்வாகம் சார்பில், திருமண மண்டபம் அமைக்க, பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
கோவில் நிர்வாகமும் பரிசீலித்து, 4.30 கோடி ரூபாய் மதிப்பில், கோவில் அருகில், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், திருமண மண்டபம் அமைக்க முடிவெடுத்து, அரசிடம் பரிந்துரைத்தது. இதுதொடர்பாக, அரசு 110 விதியின்கீழ், கடந்த 2020ல் அறிவித்து, 2021ல் நிர்வாக அனுமதியும் அளித்தது.
முதல்வர் ஸ்டாலின், 2022 ஆக., 29ல், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கினார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானப் பணிகள் நடந்து, தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மண்டப அமைப்பு
திருமண மண்டப வளாக பரப்பு 1.50 ஏக்கர். மண்டபத்தின் முதல் தளத்தில், 350 பேர் அமரும் வகையில், 6,696 ச.அடி பரப்பில், திருமண அரங்கம், மணமக்கள் அறைகள் என, இடம் பெற்றுள்ளது. இரண்டாம் தளத்தில், மணமக்கள் குடும்பத்தினர் தங்குவதற்கு, எட்டு அறைகள், ஆண்கள், பெண்கள் தங்குவதற்கு, தலா இரண்டு அறைகள், 4,044 சதுர அடி பரப்பில் இடம் பெற்றுள்ளது.
மூன்றாம் தளத்தில், மாடிப் படிகளுக்கான கூண்டு, 'லிப்ட்' அறை என, 535 ச.அடியில் உள்ளது. வளாகத்தில், 75 கார்கள், 150 இருசக்கர வாகனங்கள் என, நிறுத்தலாம். வளாகத்தில் தனியாக, குளியலறைகள், கழிப்பறைகள் ஆகியவையும் உண்டு.
இதுகுறித்து, நிர்வாகத்தினர் கூறியதாவது:
கோவில் திருமண மண்டப கட்டுமானப் பணிகள் முடிந்து, சுற்றுச்சுவர் உள்ளிட்ட இறுதிகட்டப் பணி நடக்கிறது. இப்பணிகளை முடித்து, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். வாடகை கட்டணம் குறித்து, உயரதிகாரிகளுடன் ஆலோசிலித்து நிர்ணயிக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.